spot_img
Sunday, December 22, 2024

கம்பரசம் ஏன் கசக்கிறது?

‘இராமாயணம் இலக்கியமா; புனித நூலா?’ என்றொரு கட்டுரையை அருஞ்சொல்லின் ‘தமிழ் ஒன்றே போதும்’ தொடருக்காக பெருமாள் முருகன் எழுதியிருந்தார். இது துஞ்சன் திருவிழாவில் அவர் பேசிய தொடக்க உரையின் சாரமென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

துளசிதாசரின் ‘ராமசரித மானஸ்’ நூல் குறித்து சமீபத்தில் எழுந்த அதிர்வலைகளின் ஊடாக இராமாயணம் என்ற பனுவலின் தற்கால அரசியல் மற்றும் மதம் சார்ந்த அங்கீகாரத்தை அக்கட்டுரை பதிவு செய்கிறது. 

அதில் அறிஞர் அண்ணாதுரை எழுதிய ‘கம்பரசம்’ மற்றும் ‘தீ பரவட்டும்’ நூல்களின் இராமாயண எதிர்ப்பு எத்தகையது என்பதை இரண்டு மூன்று பத்திகளில் முருகன் விவரிக்கிறார். “ராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் ஏன் எரிக்க வேண்டும் என அண்ணா எடுத்து வைத்த கருத்துக்கள் தர்க்கத்திற்குச் சிறந்த சான்றுகள்” என அதில் ஒரு வாக்கியம் வருகிறது. 

கம்பரசம் பிரச்சார நூலா, திறனாய்வுப் பிரதியா? 

இதைச் சுட்டிக் காட்டி, “அண்ணாவின் கம்பரசம் தர்க்க உரை அன்று ஆபாச குப்பை” என அரவிந்தன் கண்ணையன் முகநூலில் ஒரு பதிவிட்டார். அதில் மேலும் ஒருபடி சென்று “கம்பரசத்தை இடது கையால் புறந் தள்ளாதவன் சீரிய இலக்கிய மாணவன் அல்ல” என்றும் எழுதினார்.

இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ‘பி.சி. கணேசனிடம் தனது குற்றச்சாட்டு இலக்கிய விமரிசனமல்ல, பிரச்சாரத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது’ என்று அண்ணா ஒப்புக்கொண்டுள்ளார். அதையும் தாண்டி, “தமிழ் மொழியில் நல்ல சொல்லாட்சித் திறம் உனக்குக் கிடைக்க வேண்டுமானால் கம்ப ராமாயணத்தையும், திருவாசகத்தையும் நீ ஊன்றிப் படிக்க வேண்டும்!” என்று சொன்னவர் அண்ணா. 

இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அரவிந்தன் கண்ணையன் சொன்னபடி, ‘கம்பரசம் இலக்கிய விமர்சனப் பிரதி இல்லை என்பது’ உண்மைதான். ஆனால் ஆபாச குப்பையென்றும், இடக்கையால் புறமொதுக்க வேண்டியதென்றும் சொல்லும் அளவுக்கு கீழான நூலா? 

தன் பதிவில் பெரியாரும் ஜெயகாந்தனும் ஒரே மேடையில் உரையாடிய நிகழ்வொன்றைக் குறிப்பிடுகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜெயகாந்தன் என்ன சொன்னார் என்ற பதில் இல்லை. இந்தப் புதிருக்கான பதிலை அங்கிருந்து தேடத் தொடங்கலாம். 

அதன் சாராம்சம் இதுதான். 1959 ஆம் ஆண்டு (ஜெயகாந்தனுக்கு சுமார் 24 வயது இருக்கும்) திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பெரியாரும் ஜெயகாந்தனும் பேசவதற்காக அழைக்கப்பட்டனர். 

“மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணக் குப்பைகளை எல்லாம் கொளுத்தாமல் தமிழ்நாட்டிலுள்ள எழுத்தாளர்கள் என்னத்தை எழுதிச் சாதிக்க முடியும்?… ஐவருக்கு ஒருத்தியா, அது என்ன காவியமா?” என்று பெரியார் பேசியிருந்தார்.

ஜெயகாந்தனால் இதை பொறுக்கமுடியவில்லை. நமது தத்துவ, புராண, இதிகாசங்கள் மீது பெரியாருக்கு பகைமை மட்டும் இருந்தால் சரி, அறிவு சார்ந்த அணுகல் கூட இல்லையே என்று வெதும்பினார். பெரியாரின் ஐவருக்கு ஒருத்தியா என்ற கேள்விக்கு அறிவியல் ரீதியில் பதில் சொல்லும் ஜே.கே. மானுடவியல் கோட்பாட்டை முன்வைக்கிறார்.

“தாயைப் புணர்ந்து வம்ச விருத்தி செய்ததுதான் மனுஷக் கூட்டம். அது பாவம், குற்றம், கற்பனைக்கூடச் செய்ய முடியாத பொய் என்ற வளர்ச்சி நிலைகள் மனித குல வாழ்வியலில் ஏற்பட்டு விட்டதால், அப்படி ஒரு நிலையே இல்லாதிருந்தது என்று நம்புவது மூடத்தனமாகும்… மகாபாரதம் தொன்மைக் கதை…” என நீட்டிக் கொண்டு போகிறார்.

மகாபாரதத்தை மானுடவியல் ரீதியில் அணுகும் இலக்கியத் திறனாய்வாளர் ஜே.கே. ராமாயணத்தின் அசுரகுல மன்னனான இராவணனை ஏன் அதே தராசில் வைத்துப் பார்க்கவில்லை.

“இராவணன் சீதையை எடுத்துச் சென்றது காமச் செயல் என்றல்லவா இன்றும் கூறுகின்றனர்? அந்தக் காலப் போர் முறையிலே ஆநிரை கவர்தல், கோட்டை தாக்குதல், மாதரை எடுத்தல் (போர் நிகழ்வதற்குமுன் பெண்டிரை அப்புறப்படுத்துவது குறித்து தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. புறம். 9இல் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போர் செய்யும்போது பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர்கள் பத்திரமான இடத்திற்குச் செல்ல வேண்டி நெட்டிமையார் பாடிய பாடலே இலக்கணமாக புரிந்து கொள்ளப்படுகிறது.) என்பன முறைகள் அல்லவா? ஆகையால் ராமனைப் போருக்கு இழுக்க, அந்தச் சமயத்திலே ராமனிடம் எஞ்சியிருந்த விலைமதிக்கக் கூடிய பொருள் சீதை மட்டுமே! ஆகையால், சீதையை எடுத்துச் சென்றான் என்ற உண்மையைச் சொல்லக்கூடாதா?” என்று அண்ணா கேட்கும் கேள்விக்கு ஜே.கே. என்ன சொல்லியிருப்பார்? 

இத்தனை முற்போக்காக அறிவியல் பார்வையில் பேசும் ஜே.கே. இன்னும் சில விஷயங்களை அதே உரையில் குறிப்பிடுகிறார்.“

ஹிந்து தர்மம் இந்த மண்ணில் வாழ்கிறவர்களின் நடைமுறைக்கு ஒத்தது. இதற்கு ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. இதைப் படைத்தவனும் இல்லை; அழிப்பவனும் இல்லை. இந்த மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப்படுவதுமில்லை; எவரும் விலக்கப்படுவதுமில்லை.” 

இது ராமாயணத்தின் மூலம் மதத்திற்கு புனிதத் தன்மை கற்பிக்கும் பேச்சு இல்லையா? “

வருணாச்ரம தர்மத்தால் இந்நாடு மேன்மையுற்று வாழ்ந்தது. அந்தத் தர்மங்கள் கெட்டதனாலேயே தேசம் கெட்டது. ஆன்மீகத்தால் இந்தியக் கலாசாரமும் இந்திய சமுதாயமும் நாகரிகச் செழிப்புற்று விளங்கியது. அந்நியர் வருகையாலும், அடிமை வாழ்க்கையாலுமே நமது அவலங்கள் உருவாயின.”

இது ராமாயணக் காலத்தின் அதே அரச விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்ற அறைகூவல் இல்லையா? 1959லேயே இராமாயண – மகாபாரத நூல்கள் அரசியல் மயப்பட்டது அப்பட்டமாகத் தெரியவில்லையா? 

இராமாயணம் இலக்கியப் பனுவல் நிலையிலிருந்து புனிதப் பனுவலாக மாற்றமெடுத்தது தன் சொந்த கருத்து என்று பத்தியின் எவ்விடத்திலும் முருகன் குறிப்பிடவில்லை. வெறுமனே சமூக நடப்புகளை முன்னிறுத்தி தன் அவதானிப்புகளை முன்மொழிந்திருக்கிறார். 

ஆபாசக் குப்பை : எந்தளவு உண்மை

தங்களுடைய மாற்று வாசிப்பினாலும், எதிர் பிரச்சாரத்தினாலும் கம்பராமாயணத்தை கடுகளவும் அழிக்க முடியாது என்று அண்ணாவும் பெரியாரும் நன்கு அறிந்திருந்தனர். 

1943 ஆண்டு பிப்ரவரி 19 அன்று, சென்னைச் சட்டக் கல்லூரியில் சேதுப்பிள்ளையுடன் அண்ணா விவாதம் செய்கையில், “கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் என்று கூறப்படும் பழிச்சொல்லை நாங்கள் அறிவோம். கலையில் தேர்ந்து, அதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, கம்பனின் இராமாயணமும் சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்ற கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பெயரால், ஓர் அண்ணாதுரையின் அனலால் அந்த கலை அழிந்து விடும் என்ற கருதினால், அவ்வளவு சாமான்யமானது கலை ஆகாது. அத்தகைய கலை இருக்கவும் முடியாது என்றுரைக்க ஆசைப்படுகிறேன். எமது செயல், கலையைக் குலைப்பது அல்ல. சரியான காரணங்களோடு கலையில் புரட்சி உண்டாக்குவது!” என்றே அண்ணா சொன்னார். 

இதற்குப் பதிலளிக்க வந்த ரா.பி. சேதுப்பிள்ளை தமிழறிவைக் காட்டிலும் வழக்குரைஞர் அனுபவம் கொண்டவர். ஆனால் பாவம், பத்து நிமிடங்களில் தன் உரையைச் சுருக்கி முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அதிலும் படு அபத்தமாக இராவணன் ஓர் ‘ஆரியன்’ என்று வாதிட்டார். 

இதற்கடுத்த ஐந்து வாரங்களுக்குப் பிறகு 1943ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி சேலத்தில் சோமசுந்தர பாரதியாரோடு மீண்டுமொரு விவாதத்தில் அண்ணா கலந்துகொண்டார். 

இதிலும் மறுப்புரை பேச வந்த நபர் பத்து நிமிடங்களுக்குமேல் தாக்குப்பிடிக்கவில்லை. “ தோழர் அண்ணாதுரையின் பொருளாழமும் சொற்சுவையும் பொருந்திய நீண்ட பிரசங்கத்தை கேட்டு இன்புற்றீர்கள்” என்று தொடங்கிய சோமசுந்தர பாரதியார் ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று சொல்லி அண்ணாவின் பதில் உரைக்கு காத்திராமல் கிளம்பிவிட்டார். 

அறிஞர்களை திக்குமுக்காடச் செய்த தீ பரவட்டும் நூலைதான் ‘குப்பை’ என்று சொல்கிறார்கள். அதில் இருப்பது அண்ணாதுரையின் ஆபாசமா, கம்பனின் ஆபாசமா? 

ஆரிய திராவிடப் புரட்டா?

அரவிந்தன் கண்ணையன் பதிவிற்கு ‘தீ பரவட்டும்’ நூல் ஓர் ஆரிய திராவிடப் புரட்டு என்று பி.ஏ. கிருஷ்ணன் கருத்து பதிவு செய்திருந்தார். டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூலில், ஆரியர் தங்கள் நில அதிகாரத்தை தென்னகம் நோக்கி விரிவு செய்த காலத்திற்கு உட்பட்டது இராமாயணம் என்று சொல்வதை கிருஷ்ணன் மறுக்கிறாரா? 

“The Ramayana story is one of Aryan expansion to the south. The great civil war which occurred later described in Mahabharata is vaguely supposed to have taken place about 14th century BC” 

 -The Discovery of India, Jawaharlal Nehru.

நேரு உட்பட பல அறிஞர்களின் கருத்து இது. 

கம்பரசம் ஏன் தேவை?

ராமாயணம் ஓர் இலக்கியப் பனுவலாக இருந்தால், அதற்கெழுந்த ‘கம்பன் எடுத்த முத்துக்கள், கம்பன் கலை, கம்பன் நோக்கில் நாடும் மன்னனும், கம்பன் புதிய பார்வை’ போன்ற அ.ச. ஞானசம்பந்தன் நூல்களையும் ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ போன்ற நாவலர் சோமசுந்தர பாரதியின் நூலையும் வாசிக்கலாம்.

ஆனால் நூற்றுக்கணக்கான வடிவங்கள் கொண்ட ராமாயணம் அரசியல் நூலாகவும் மதப் புனிதம் அடைந்த நூலாகவும் ஈடேறிய பின் அதை அண்ணாவின் அரசியல் கண்ணாடி அணிந்த ‘தீ பரவட்டும்’ நூலின் வழியும், ‘கம்பரச’த்தின் வழியும் பார்ப்பது இன்றியமையாதது. 

கம்பர் எந்தளவு மூலத்திலிருந்து வேறுபட்டு நஞ்சு கலந்து ராமாயணத்தை தமிழுக்குக் கொண்டுவந்தார் என்பதற்கு ‘குடி அரசில்’ 15-01-1944இல் வெளியான பெரியாரின் ‘இராமாயணம்’ கட்டுரையை வாசிக்க வேண்டும். இராமாயணத்தின் சீர்கேடுகளை 121 நெற்றித் தெறிப்பான பாய்ண்ட்களால் துவம்சம் செய்கிறார்.

1980ஆம் ஆண்டு வேத ராமாயணத்தை ஒட்டி உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. (காண்க AIR 707) சூத்திரன் சன்யாசி ஆகலாமா என்ற கேள்விக்கு பதிலளித்த நீதிபதிகள் மும்தகா ஃபசல், ஏ.பி.சென் இருவரும் முடியாது என்றார்கள்.

இந்தியா வேதநெறியின்படி அது செல்லாது என்கிறார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது இங்கு கேள்விக்கு உள்ளாகதா?

மிகச் சமீபத்தில் கூட இப்படியொரு சம்பவம் அரங்கேறியது. முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து பிரியா ரமணியை விடுத்தபோது, தில்லி நீதிமன்றம் ராமாயணம், மகாபாரதம் காப்பியங்களை மேற்கோளிட்டுக் காட்டியது. 

நீதிமன்ற வளாகத்தில் மேஜிஸ்திரேட் ரவீந்திர குமார் பாண்டே ஆரண்ய காண்டம் சொற்பொழிவே நிகழ்த்தினார். 

இத்தகைய காலக்கட்டத்தில் ராமாயணத்தை வெறுமனே இலக்கியப் பிரதியாக பார்க்காமல், மத புனிதம் ஏறிய அரசியல் நூலாகப் பார்க்க வேண்டும். அரவிந்தன் கண்ணையனும் தன் பதிவில் இதைப் பாதிக்குப் பாதி ஒப்புக்கொள்கிறார். (இக்கேள்விக்கு என் தரப்பு பதில் அது இலக்கிய நயமிகுந்த மத நூல் என்பதே.)

இதை ஒப்புக் கொள்பவர்களுக்கு கம்பரசம் கசக்காது; கம்பரசம் கசக்கிறதென்று சொல்பவர்களுக்கு இதை ஒப்புக்கொள்ளும் பக்குவம் வராது. 

ஆதார நூல்கள்

1. அண்ணா: ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை, இரா. கண்ணன்.

2. பெரியார் இன்றும் என்றும், விடியல் பதிப்பகம்.

3. நீதி தேவன் மயக்கத்தில் முரண், இர. மணிமேகலை.

4. தீ பரவட்டும், அண்ணாதுரை.

5. கம்பரசம், அண்ணாதுரை.

6. அண்ணா எனும் இலக்கியவாதி, பி.சி. கணேசன்.

7. ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், ஜெயகாந்தன்.

8. https://www.hindustantimes.com/india-news/mj-akbar-defamation-case-judge-quotes-mahabharata-ramayana-101613556395822.html

9. https://www.scribd.com/document/56129005/Supreme-Court-on-Mutt-Case-Air-1980-Sc-707-Sri-krishna-singh-Case?fbclid=IwAR2UI3pBJvfNXL0FvmxlgBuAbGky64Sm4qXCk1oHMkoXcpy8S2E4lBjNq78

10. பெருமாள் முருகனின் கட்டுரைக்கான இணைப்பு : https://www.arunchol.com/perumal-murugan-on-ramayanam

11. அரவிந்தன் கண்ணையன் முகநூல் பதிவுக்கான இணைப்பு  : https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02nw5avsmcDgx3akpAjANQHor9jRUdzZRC3NrhFoeZLAttDvcauXLqYjmc9dDhHYoAl&id=1221294625&mibextid=Nif5oz

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்