தீப்ஸ் நகரின் ஏழு வாயில்களையும் எழுப்பியது யார்?
வரலாறு உங்களுக்கு ஒரு மன்னர் பெயரைச் சொல்லும். ஆனால் பாறைகளை வண்டியில் இழுத்து வாசற்படி வைத்தது,
அந்த மன்னர்களா என்ன?
பாபிலோன் நகரம் பலமுறை இடிந்து விழுந்ததாமே, அதை சளைக்காமல் செப்பனிட்டது யார்?
மினுமினுக்கும் தங்க நிற லிமா நகரை கட்டிய கொத்தனார்கள், அந்நகரின் எந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்?
சீனப் பெருஞ்சுவருக்கு மண் சட்டி எடுத்த சித்தாள்கள், சாயங்காலம் வந்ததும் எங்கு ஓடிப் போய் ஒளிந்து கொள்கிறார்கள்?
ரோமப் பெருநகரம் முழுக்க வெற்றிச் சின்னங்கள் நட்டிருக்கிறார்களே, அவையெல்லாம் யாரால் ஏற்பட்டது?
சீசர் வென்றது யாரை எதிர்த்து?
மெச்சிப் பாடிய பைசான்டிய நகரத்தில், பிரபுக்களுக்கு மட்டுந்தான் இடம் கொடுக்கப்பட்டதா?
கடல் கொள்ளப்பட்ட அட்லாண்டிஸ் நகர்வாசிகளுக்கு, தன் அடிமைகள் மீதான அக்கறை தான், அன்றிரவு எத்தனைக்கோடி!
விடலை அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வெறுங்கையோடு வந்தாரா என்ன? அவரின் துருப்புகள் எங்கே?
கால்ஸை தோற்கடித்த சீசருடன், ஒரு சமையல்காரர் கூட வரவில்லையா என்ன?
தன் கப்பற்படை கவிழ்ந்தபோது, ஸ்பெயின் மன்னன் பிலிப் கண்ணீர் கசிய கரைந்தானாம். அங்கு அழுதது அவனொருவன் மட்டுமா என்ன?
இரண்டாம் ஃபெரிட்ரிக் ஜெயித்த 7 ஆண்டு காலப் போர், அவனுக்கு மட்டுமா மகிழ்ச்சி தந்தது?
வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் வெற்றியாளராக இருந்தால், இந்த வெற்றியாளர்களுக்கு விருந்து வைத்த சமையற்காரர்கள் எங்கே போவார்கள்?
ஒவ்வொரு பத்தாண்டு காலமும் ஒரு மகத்தான மனிதர் தோன்றுகிறார். இவர்களுக்கு தொண்டூழியம் செய்பவர்கள் எங்கே போகிறார்கள்?
பற்பல அறிக்கைகள். பற்பல கேள்விகள்.
– பெடாலட் பெர்க்ட் (Bertolt Brecht), German Playwriter.