பாரதியார் பற்றி சலபதி பலகாலம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் ‘எழுக நீ புலவன்’ புத்தகம் கோர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய புத்தகம் தமிழ் ஆய்வுலகில் புதிதன்று. பாரதி பற்றி அவர் குடும்பத்தார் எழுதிய குறிப்புகளே வண்டி வண்டியாய் உள்ளன. மேலும் அவர் பற்றி தமிழ் அறிவுலகில் அத்தனைப் புத்தகங்கள் – அத்தனைக் கட்டுரைகள் எழுதித் தீர்த்தபோதும் சலபதி போன்ற ஆய்வாளர்களின் கண்களுக்கு இன்னுமெழுதாத பக்கங்கள் துருத்திக் கொண்டே இருந்துள்ளன போலும். கால இடைவெளியில் அங்கங்கு அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து காலச்சுவட்டின் பதிப்பாய் இப்புத்தகம் 2016-ல் வெளிவந்தது.
ஹென்றிவுட் நெவின்சன் எழுதிய பத்திரிகைக் குறிப்பிலிருந்து பாரதி வரலாற்றை விரித்துக் கூறத் தொடங்குகிறார் சலபதி. ஆனால் அதிலவர் பெயர் இடம்பெறாமையும் அது பாரதிதான் என நிறுவுவதற்குத் துணைசேர்க்கும் சான்றாதாரங்களும் சலபதியின் வழக்கமான மெனக்கெடலை கண்முன் நிறுத்துவதோடு ஏற்புடையதாக இருக்கிறது.
1950-களில் அம்பேத்கரின் பிபிசி நேர்காணல் ஒன்று யூடியூப்-ல் காணக்கிடைக்கிறது. அதில் காந்தியின் இரட்டைமுகம் வெளிப்படுமாறு அம்பேத்கர் பேசியிருப்பார். “மேனாட்டு அறிஞர்கள் போற்றும்படி காந்தியின் அறிவுஜீவித்தனமான முற்போக்கு எழுத்துக்கள் ஆங்கில இதழ்களில் பிரசுரமாகின. அதைப் படித்துவிட்டு மேனாட்டார்கள் அவரை கொண்டாடினார்கள். அதேவேளையில் சதுர்வர்ணமுறையை ஆதரித்தும் சாதி முறையைத் தூக்கிப்பிடித்தும் அவர் பேசும் எழுத்துக்கள் உள்ளூர் மக்களுக்குப் புரியும்படி குஜராத்தியில் வெளிவந்தன. இதன்மூலம் தான் ஹிந்து மதத்திற்கும் – சதுர்வர்ண முறைக்கும் எதிரானவன் அல்ல என பதியவைத்தார்” என்று அம்பேத்கர் சொல்கிறார்.
இதே குணத்தை நாம் பாரதியிடமும் காண முடிகிறதென முற்றும் ஆய்ந்த சலபதி சொல்லுமிடத்து, “ஆங்கிலத்தில் எழுதுங்கால் தன் கருத்துகளை அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்த பாரதி, தமிழில் எழுதும்பொழுது சிறிது சற்றி வளைத்தே எழுதுகிறான்” என்கிறார்.
தமிழில் கருத்துப்படங்களுக்கு மட்டுமல்ல, பத்தி எழுத்திற்கும் (Columns) பாரதியே முன்னோடி என ‘தராசு’ தொடர் பற்றி நிறைய செய்திகளை முன்வைக்கிறார். அரும்பெரும் செய்திகளை அடுக்கும் அதேவேளையில், குறை சொல்லவும் – எதிர்மறை கருத்தாக்கங்கள் முன்மொழியவும் சுணக்கம் காட்டவில்லை.
மொழி வளர மொழிபெயர்ப்புகள் இன்றியமையாதவை. ஆனால் கலைச்சொற்களை உருவாக்கும் போது தமிழ்மொழியில் மட்டுமல்லாது, அவை வடமொழியும் சார்ந்திருக்க வேண்டும் என பேசும் பாரதி இங்குச் சிறைபிடித்து சுட்டிக்காட்டப்படுகிறார். இந்தியாவிற்கு பொதுமொழி வேண்டும் என்ற கருத்தாக்கம் எழுந்தபோது, ‘இந்தி’ மொழிக்கே அந்தத் தகுதி இருப்பதாக உரைத்தான். பின்னாளில் அரவிந்தரின் தொடர்பால் ‘வடமொழி’ என்று மாற்றுக் கொடி பிடித்தாலும் மேட்டிமைத்தனம் மாறாத புத்தியை ‘பாரதியும் மொழியின் நவீனமையமாக்கமும்’ என்ற கட்டுரை புத்தொளி வீசி வெளிக்கொணர்கிறது.
மேலும் இதழாசிரியர்களின் மட்டமான மொழிப்புலமையைப் பற்றிப் பேசுகையில், ‘தகுதியை நோக்கி பஞ்சாலையில் வேலைக்கு அனுப்ப வேண்டும்’ எனச் சொல்வது பாரதியின் பார்ப்பனக் குசும்பாகத் தெரிகிறது.
“சாதியைப் பொறுத்தமட்டில், பாரதி கூறும் பேச்சுத் தமிழ் பிற்பட்ட, தலித் சாதிகளின் பேச்சு மொழியைக் குறிப்பிடுகின்றதா என்ற கேள்வியே எழ முடியாத வகையில் அவனுடைய மொழி பெரிதும் பார்ப்பனச் சொல்லாடலையே கையாள்கின்றது. நடைமுறையில் இல்லாத வடமொழிச் சொற்கள் அவற்றின் மூல வடிவிலேயே பாரதியிடம் பயிலக் காணலாம். மேலும் அத்தகையதொரு மொழியினையே அளவுகோலாகவும் பாரதி பார்த்திருக்கிறான்” என்று சலபதி எழுதுகிறார்.
உண்மையில் சொல்லப்போனால், கவிதையில் ஒதுக்கித் தள்ளிய அத்தனை வடமொழிச் சொற்களையும் உரைநடையில் எழுதித் தீட்டியுள்ளான் பாரதி.
அவன் வெளியிட்ட கருத்துப்படங்களில் கூட இந்துமதவியல் கூறுகள் வெளிப்படையானவை. ஹிதிகாச – புராணப் படங்களே பெருவாரியாக மண்டிக் கிடக்கின்றன.
வானவியல், வரலாறு, கதை, காவியம், விளையாட்டு என சகலமும் தாய்மொழியில் வேண்டுமென கேட்டவன் சமயத்துறையிலும் வழிபாட்டுத் தளத்திலும் ஏன் இந்த கேள்வியை முன்னெழுப்பவில்லை என சலபதி கேட்கும் கேள்விகள் காத்திரமானவை.
நான் விரும்பிய மிகமுக்கியமான கட்டுரை ‘தமிழறிந்த மன்னரிலை என்ற வசை : எட்டயபுர ஜமீன்தார்கள் பற்றி..’ மாக்கவி ஒருவன் தனது சுய மரியாதையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு புத்தகம் எழுதும் பொருட்டு, பொட்டிப் பாம்பாக அடங்கி எவ்வளவு போராடி இருக்கிறான் என்ற சிரமத்தை இதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம்.
அழுக்கும் கந்தலுமாய் உண்மையும் பொய்யுமாய் பிரம்மாண்ட வாழ்வு வாழ்ந்த பாரதி குறித்து சலபதி எழுதியிருக்கும் இந்த 14 கட்டுரைகளும் தனித்துவமானவை. கருத்துப் படங்கள் தொடர்பான கட்டுரைக்கு ஒன்றிரண்டு கார்ட்டூன்களாவது அச்சிட்டிருக்கலாம்.
மொத்தத்தில் பாரதி அன்புர்களும் படைப்பிலக்கிய விரும்பிகளும் அள்ளி அனைக்கும் ரசமான புத்தகம் ‘எழுக நீ புலவன்.’