1865 ஆம் ஆண்டு அது. கும்பகோணத்தில் உள்ள மாகாணப் பள்ளிக்கூடம் (Provincial School) அப்போதுதான் காலேஜாக தரம் உயர்த்தப்பட்டிருந்தது. அங்குள்ள பி.ஏ. வகுப்பில் பண்டிதர் கோபாலராவ் இலக்கண வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். முந்தைய நாள் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்டு வகுப்பைத் தொடங்குவது அவர் வழக்கம்.
ஒரு மாணவனை எழுப்பி, ‘செல்வுழிச் செல்க என்ற தொடரில் செல்வுழி என்ற பதத்தை எப்படிப் பிரிப்பாய்?’ எனக் கேட்டார். அவன், ‘செல் + உழி’ என்று பதிலிறுத்தான்.
‘இடையில் வகரம் வந்திருக்கிறதே. அதன் பெயர் என்ன?’
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. இப்படி ஒவ்வொரு மாணவனாக அவர் கேட்டுக் கொண்டே வந்தார். மாணவர்கள் பலர் விடை தெரியாமல் முழித்தனர்.
அதில் ஒருவன் மட்டும் எழுந்து, “செல்வுழி என்பதில் இடையே வந்த ‘வ’கரம் எழுத்துப்பேறு எனப்படும்” என்று தைரியாமாகச் சொல்லி அமர்ந்தான்.
கோபாலராவ் ஆச்சரியமடைந்தார். இதை அவர் வகுப்பில் சொல்லித் தந்ததில்லை. ஆனால் அவன் மிகச் சாதுர்யமாக சரியான பதிலைச் சொல்லியிருந்தான்.
‘அந்த வகரத்தை உடம்படுமெய் என்று ஏன் சொல்லக் கூடாது?’ என்று அந்த மாணவனை மேலும் துலாவினார்.
“உயிர் ஈற்றின் பின் உயிர் வந்தால் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேராது. அதனை உடம்பட செய்வதற்கே ‘ய’கர ‘வ’கர உடம்படுமெய்யை பயன்படுத்த வேண்டும். செல்வுழியில் உள்ள ‘வ’கரம் வேறு வகையில் தோன்றிய எழுத்து. ஆகையால் இதனை எழுத்துப்பேறு என்றே சொல்ல வேண்டும்” என்று கூறி பவ்வியமாய் அமர்ந்தான்.
கோபாலராவ் அளவற்ற மகிழ்ச்சியில், ‘ஏனப்பா உன் பெயர் என்ன?’ என்று கேட்க..
தேவாஜி ராவ் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அச்சிறுவன், அந்த வருஷந்தான் அங்கே பாடம் படிக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்தார். தன் பள்ளிக்கூட ஆசிரியர் ‘தியாகராச செட்டியார்’ மூலம் நன்னூலை ஆழமாகக் கற்றேன் என்று அவன் சொன்ன மறுகணமே, பட்டாளத்து பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக வேலை செய்துவந்த தியாகராசருக்கு கீழ்காணும் கடிதம் பறந்தது.
“ உங்களுடைய கல்வி ஆற்றலை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கூடத்தில் (காலேஜ்) முதல் தமிழ்ப் பண்டிதர் வேலை காலியாக இருக்கிறது. அதற்கு உங்களை நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒருமுறை இங்கே வந்தால் நேரில் விஷயங்களைப் பேசலாம்.” இதனை எழுதியவர் கோபால ராவ்.
தான் பெற்ற கல்விப் புலமையால், தன் மாணவர்களை உயர்ந்த உத்தியோகத்திற்கு அனுப்பும் பல பேராசிரியர்களுக்கு மத்தியில், தான் பாடம் சொன்ன புலமையால் – தன் மாணவனால் பேராசிரியர் பதவி பெற்ற பெருந்தகை, வித்துவான் தியாகராச செட்டியார்.
தியாகராசர் யார்?
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரிடம் கல்வி பயின்ற இவர், 19-ம் நூற்றாண்டின் தமிழ் மீட்சி வெளிச்சத்தில் மிக மங்கிய ஆளுமைகளுள் ஒருவர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடிக்கு அருகே உள்ள பூவாளூரில் பிறந்த இவர், மிக்க நிலபுலன்கள் உடைய செல்வந்த குடும்பத்தின் வாரிசு.
இவர் தந்தை சிதம்பரஞ் செட்டியாருக்கு, தியாகராசர் கல்வி கற்பதில் துளியும் ஈடுபாடு இல்லை. இத்தனைச் செல்வம் இருக்கும்போது, தேவையில்லாமல் பொருள் சேர்ப்பதற்கு ஏன் கல்வி கல்வி என்று அலைய வேண்டும் என பலமுறைத் தடுத்தும், தன் பிடிவாதக் குணத்தால் திருச்சியில் தன் சிறிய தந்தை வீட்டில் தங்கி, மகாவித்துவானின் மாணவர் ஆனார்.
அது 1844 என்பதால், உ.வே.சாமிநாதையர் இன்னும் மகாவித்துவானிடத்து வந்து சேரவில்லை. அவ்வழி பார்த்தால் தியாகராச செட்டியார், உ. வே. சாமிநாதையருக்கு நேரடி ‘சீனியர்’.
மீனாட்சிசுந்தரனாருக்கும் சுலபத்திலேயே தியாகராசரின் புலமை புரிந்துபட்டது. ஆகையால் அருகே உள்ள பட்டாளத்து பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியர் பணிக்கு சிபாரிசு கொடுத்தார். அப்போது அங்கு தியாகராயர் பயிற்றுவித்த மாணவர்களுள் ஒருவர்தான் நாம் மேலே பார்த்த தேவாஜி ராவ்.
பின்னர் 1800-களின் பிற்பகுதியில் தாம் வேலை செய்த அதே கல்லூரியில், உ.வே.சாமிநாதையருக்கு தமிழ்ப் பண்டிதர் வேலை வாங்கித் தந்தவரும் தியாகராசரே!
உ.வே.சா.வும் தமிழ்ப் பண்டிதர்கள் வரலாறும்
உ. வே. சாமிநாதையரின் பெருமையைத் தமிழ் உலகம் அறியாதது இல்லை. கரையான் அரித்து புழுப்பிடித்த போன ஓலைச்சுவடிகளையும்; இராமபாணப் பூச்சிகள் மென்றுத் திண்ண மிச்ச மீதிகளையும் எச்சமில்லாமல் சேகரித்த ஓய்வறியா ஜீவன் அவர்.
‘என் சரித்திரம்’ எனும் நூலில் அவர் பட்ட பாடுகளை நாம் படிக்கும்போதே நெஞ்சில் மூச்சிறைக்கும். அத்தகைய ‘மகாமகோபாத்தியாய தாஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையரை’ இலக்கிய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் என்பதற்காக மட்டுமே தமிழ்த் தாத்தா என்ற அடைமொழிக்குள் நாம் அடக்கிவிடக்கூடாது.
அவர் காலத்திலும் அவருக்கு முன்னரும் வாழ்ந்த பல தமிழ்ப் பண்டிதர்களைப் பற்றி நிறைய கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். தியாகராய செட்டியார் என்றொரு தமிழ்ப் பண்டிதர் இருந்த செய்தியே, உ.வே.சா எழுதிய ‘வித்துவான் தியாகராய செட்டியார்’ எனும் நூல் மூலந்தான் நமக்குத் தெரியவருகிறது. (இது கலைமகளில் தொடராக வந்தது) இல்லையெனில் அரசல் புரசலான செய்திகளை வைத்து ‘பிட்டி தியாகராய செட்டியாரோடு’ முடிச்சுப் போட்டிருப்போம்.
அதுமட்டுமல்ல கோபாலகிருஷ்ண பாரதி, கனம் கிருஷ்ணையர், பூண்டி அரங்கநாத முதலியார், சேஷையா சாஸ்த்திரி, பொன்னம்பலம் இராமநாதன், மணி ஐயர், வி. கிருஷ்ணசாமி ஐயர், வேங்கடராம பாகவதர், அனந்தராம ஐயர், பெரிய வைத்தியநாதையர் போன்றோர் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார், உ.வே.சா.
ஆளுமைகளை ஆவணப்படுத்தல்
சலபதி எழுதிய உதிராத மலர்கள் கட்டுரையில் இருந்து சில கணக்கீடுகளைக் கடன் வாங்கிக் கொண்டால்:
1919-ல் தன் கல்லூரிப் பணியிலிருந்து உ.வே.சா ஓய்வுப்பெற்றார். அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் அவரின் பெரும் பதிப்புப் பணிகள் நிறைவுற்றன. 1924-ல் வெளியான பெருங்கதைக்குப் பின்னர் சிற்றிலக்கிய நூல்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். இதற்கிடைப்பட்ட காலவெளியில் அச்சுக்கலையில் நவீனங்கள் புகுந்ததால், சஞ்சிகைகளுக்கு கட்டுரை எழுத அவர் வற்புறுத்தப்பட்டது தெரியவருகிறது. 1926 வரை (தன் எழுபதாவது வயது வரை) நான்கைந்து கட்டுரைகள் மட்டுமே எழுதியிருந்த அவர், அதன் பிறகு 160 கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சராசரியாகச் சொல்ல முனைந்தால், 1927-க்குப் பிறகு மாதம் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அப்படி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகத்தான் ஆளுமைகளை நாம் அடையாளங் கண்டிருக்கிறோம். அறிவியலோடு ஒருங்கிணைந்து சென்ற உ.வே.சா’விற்கு ஆளுமைகளை எதிர் காலத்திற்குக் கடத்திச் செல்ல, வெறுமனே எழுத்துவழி வரலாறு மட்டும் போதாது என்று தோன்றுயிருக்கிறது போலும். அழகுற அங்கி அணிந்து, தலைப்பாகை சூடி நாற்காலியில் அமர்ந்துள்ள அவரின் திருவுருவப் படம் இதனை மெய்ப்பிக்கின்றது. அவரின் நூல்களில் இடம்பெறும் செய்திகளும் இதனையே வழிமொழிகின்றன.
ஶீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் எனும் நூலின் முகவுரையில், “ இவர் காலத்தில் படம் எடுக்கும் கருவிகள் இருந்தும் இவரோடு பழகியவர்களுள் ஒருவரேனும் இவருடைய படத்தை எடுத்து வைக்க முயலாதது வருத்தத்ததைத் விளைவிக்கிறது. என்னுடைய மனத்தில் இவருடைய வடிவம் இருந்து அவ்வப்பொழுது ஊக்கம் அளித்து வருகிறது; ஆயினும் பிறருக்கு அதனைக் காட்டும் ஆற்றல் இல்லாமைக்கு என்செய்வேன்!” என்று தன் ஆசிரியரின் உருவப் படம் இல்லாமல் போனதை எண்ணி வருத்தம் கொள்கிறார்.
எனினும் இன்று நாம் காணும் மீனாட்சி சுந்தரனாரின் புகைப்படம் எப்படி தோன்றியது என்பது ஆய்விற்குரியதே.
வித்துவானும் தமிழ்த் தாத்தவும்
இதே வருத்தத்தை, வித்துவான் தியாகராய செட்டியார் நூலிலும் அவர் பகிர்கிறார். வித்துவான் மீது கொண்ட ஈடுபாட்டால், கல்லூரியில் உ.வே.சா தங்கியிருக்கும் இடத்திற்கு ‘தியாகராஜன் விலாசம்’ என்றே பெயர்.
இருவருக்கும் உண்டான உறவை அந்நூலின் முகவுரையில், “என் ஆசிரியரிடம் எனக்குமுன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர்; என்பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர்; இன்ன இன்னபடி மாணாக்கர்களிடம் நடந்து வரவேண்டும் என்பதையும் சில நூல் பொருள்களையும் வேறு விஷயங்களையும் எனக்கு அறிவுறுத்தினமையின் என் ஆசிரியர்களில் ஒருவர்; எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராத நிலையைச் செய்வித்தமையின் ஒரு வள்ளல். தியாகராசர் என்று இவருக்கு வாய்த்த பெயர் என்னளவில் பொருளுடையதாகவே நிற்கின்றது.” என்று உவகைக் கொள்கிறார்.
எனினும் மீனாட்சி சுந்தரனாரைப் போல் இவரது உருவப்படமும் இல்லாமல் போய்விடக் கூடாது என்று எண்ணி, யாரையேனும் கொண்டு ஒரு படம் எடுக்கச் செய்து அனுப்ப வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதுகிறார்.
உருவப் படம் வேண்டி ஒரு கடிதம்
இதனை அறிந்த வித்துவான் 4-12-1887 தேதியிட்ட கடிதமொன்றில், பின்வருமாறு பதில் அளிக்கிறார்:
“… என் உருவத்தைப் பொட்டகிராப் எடுக்கும்படி தாங்கள் உத்தரவு செய்தீர்களாம். யான் குரூபம் அடைந்த காலத்தில் எடுக்க எனக்குச் சம்மதம் இல்லை. அன்றியும் நல்ல உடை உடுத்துக் கொண்டு ஒரு நாழிகை அசையாதிருக்கச் சற்றும் பலமில்லை. படுத்துக்கொண்டே இருக்கிறேன். நேத்திரம் இரண்டு நிமிஷம் சேர்ந்தாற்போல் விழித்திருக்கக் கூடவில்லை. இந்த ஸ்திதியில் உருவம் எடுப்பது சற்றும் தகுதியன்று. தாங்கள் இவ்விடமிருந்து போன நாள் முதல் நாளது பரியந்தம் போகும் வயிற்றுப் போக்குச் சற்றும் நிற்கவில்லை. அன்னம் செல்லவில்லை. காரமும் சேரவில்லை…
தேகம் விளிர்ப்புடன் மிக மெலிந்துவிட்டது. ஆதலால் நான் செவ்வையாயிருக்கும்போது காலேஜ் ஸ்தம்பத்தில் உருவம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. தெற்குத் தாழ்வாரத்தில் கீழ் புறத்தில் இருக்கிறது. கோபாலராயர் அவர்களுடைய உருவம் குதிரையில் இருந்ததுபோல ஒரு பக்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல மொச்சியன் (ஓவியன்) அகப்பட்டால் அந்த உருவத்தைக் காண்பித்துக் கூடியவரையில் ஒரு படம் எழுதிக் கொண்டால் அதை வைத்துக்கொண்டு பொட்டகிராப் வேண்டியபடி எடுத்துக் கொள்ளலாம்…. படம் எழுதும் மொச்சியன் என்னைப் பார்த்திருப்பவனாய் இருந்தால் உத்தமந்தான்.”
உ.வே.சா.விற்கு பெருத்த ஏமாற்றம். கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் முடிச்சுப் போட்டு ஒன்றிணைக்கும் பெரும் பணியை உ.வே.சா. ஏற்றிருந்தார் என்பது புதுமைப்பித்தன் போன்ற வெகு சிலருக்குத் தான் தெரிந்திருந்தது. எனினும் வித்துவான் போன்ற பெரும் ஆளுமையின் புகைப்படம் இல்லாமல் போவது, எதிர்காலத்திற்கு பெரும் இழப்பு என்று அறிந்திருந்தார்.
மொச்சியன் கொண்டு ஓவியம் எழுதும் பணி
வேறு வழியில்லாமல், நல்ல ஓவியன் ஒருவனை அழைத்துக் கொண்டு இளம் பிராயத்தில் செதுக்கப்பட்ட வித்துவானின் உருவப் படத்தை நோக்கி விரைந்தார். தலைப்பாகை, கைவிசிறி, பாதக்குறடு கொண்டு திகழ்ந்த வித்துவானின் உருவச் சிற்பத்தை பார்த்து, ‘நல்லவேளை! தச்சன் அரைகுறையாகவாவது உருவத்தை அமைத்தான்’ என்று நொந்துக் கொண்டு ஓவியனை வைத்து வரைந்து முடிந்தார்.
அப்படி அவர் வரைந்த உருவந்தான், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் சார்பாக வெளியிட்ட ‘வித்துவான் தியாகராச செட்டியார்’ நூலின் அட்டைப் படத்தில் உள்ள அவரின் ஓவியம்.
இத்தனைப் பெரும் அரும்பாடுபட்டுத்தான் பல அரிய ஆளுமைகளை உ.வே.சா நமக்கு கொண்டுவந்திருக்கிறார். இத்தனை ஓய்வறியா பண்பாளரை தமிழ்த் தாத்தா என்ற சிறு சட்டகத்துள் அடக்க முயல்வது நியாயம் தானா?