மகாவித்துவான் இறந்துவிட்டார். எனினும் அவர் காட்டிய நெறியில், சந்நிதானத்திடம் பாடம் கேட்டுக் கொண்டே தம்பிரான்களுக்கு பாடஞ் சொல்லி திருவாவடுதுறையில் நாட்களைக் கழித்து வந்தார் சாமிநாதர். திருவாவடுதுறை நாட்கள் அவர் வாழ்வின் பொன்னான காலமென்று தெரிகிறது.
வாழ்வின் அடுத்த அத்தியாயம் பற்றி பெரிய கனவுகள் இல்லாமல், மடாலயத்திற்கு அருகிலேயே ஆதினக் கர்த்தர் கட்டித் தந்த புதிய வீட்டில் குடியமர்ந்தார். பூசைக்கு வேண்டுமென்றால் மடத்திலிருந்து மூட்டை மூட்டையாக தேங்காய் வரும். உப்பு, புளி என்று சகலமும் காறுபாறு வசம். தேவையறிந்தால் போதும் வாய்த் திறப்பதற்குள் வேண்டிய பொருளை வண்டிவண்டியாக இறக்கினார்கள். எனினும் அதில் நிறைவு இல்லை எனத் தெரிகிறது. சாமாவிற்கு எதிர் மனப்பான்மை கொண்ட சிலர் மடத்தில் இருந்ததாக அவரே சொல்கிறார். இதனால் ஏற்பட்ட சங்கடங்களும் பல.
வாழ்வில் இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவருக்குத் தோன்றவே இல்லை. ஆனால் அவர் தந்தை அடிக்கடி குறுக்கீடு செய்தார். கௌரவமான பணியென்றாலும், வாழ்வின் அடுத்தக் கட்டம் பற்றி பயம் தோன்றாமல் இருக்குமா? உ.வே.சா.வின் குடும்பப் பின்னணியில் இருந்து பார்த்தால் இதன் ஆழம் புரியும். சுப்பிரமணிய தேசிகர் சாமாவின் தந்தையை அழைத்து அவ்வப்போது மனமாற்றம் உண்டாக்கி அனுப்புவார். அவை தற்காலிகமாய் நீடிக்கும்.
தியாகராச செட்டியார் ஆதீனக் கதவைத் தட்டும்வரை நாட்கள் இப்படித்தான் சென்றன. கும்பகோணத்தில் தான் பார்த்துவந்த வேலையை சாமாவின் பெயருக்கு சொல்லிவைத்திருப்பதாகவும்; அதற்கு மடாதிபதியின் நன்மதிப்புச் சான்று கிடைத்தால் வேலை உறுதியாகிவிடும் என்றும் தியாகராசர் சன்னமாகச் சொன்னார்.
தம்பிரான்களும் தேசிகரும் சொல்வதறியாமல் மௌனம் காத்தனர். இப்பேர்பட்ட மனிதரை இழக்க ஆதீனத்திற்கு மனமில்லை. எனினும் மடாலயத்து மனத்தை நெம்புகோல் கொண்டும் அன்புகோல் கொண்டும், மனம் ஒருமித்து கசிந்து சம்மதம் சொல்லும்வரை இறைஞ்சினார் தியாகராசர். அவர் வேண்டுதல் பலித்தது. கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக உ.வே.சா. பணியமர்ந்தார். நல்ல சம்பளம். கௌரவமான உத்தியோகம்.
அதற்குப்பின் ஓரிடத்தில் உ.வே.சா. சொல்கிறார்: “உப்பில்லை, புளியில்லை யென்ற குறை காதில் விழாதிருப்பதைப் போன்ற சுகம் வேறு இல்லை.”
இந்த வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வலியில்தான் நான் உ.வே.சா.வை கண்டடைகிறேன். Passion வேறு Profession வேறு. எதற்காகவும் எதையும் Compromise செய்யக்கூடாதென்ற பாடத்தை அவர் எப்போதும் எனக்குப் போதிப்பார். எலி வளையாயினும் தனி வளை வேண்டுமன்றோ?
சாமாவை சாதிய அடையாளங்களால் இன்று பலர் ஏசுகின்றனர். வைணவம்சார் குடும்பப் பின்னணியில் பிறந்து, சைவ மடாலயத்தில் பாடம் கேட்டு, திருவாடுதுறை ஆதீனக் கர்த்தருக்கு அணுக்கமாக வாழ்ந்து, ஜைன நூலான ‘சீவகசிந்தாமணிக்கு’ அரும்பணி செய்து பெரும்பதிப்பு கொண்டு வந்தாரே, அவரையா சிறு கட்டத்தில் அடைத்துப் பார்க்கிறீர்கள்?
வாழ்க உ.வே.சா.!