1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நாக்பூர் நகரமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஆனால் இந்தத் திருவிழா மத நிகழ்வாக அமையவில்லை, மாறாக மதத்தை தூக்கி எறியும் பெருவிழாவாக அமையவிருந்தது.
ஆண்டாண்டு காலமாக தன்னை அடிமைப்படுத்தி வரும் மதத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட சமூகம் சுய-விடுதலைக்கு தன்னை மும்முரப்படுத்தியது. கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்து விளக்குகளையும் குறிப்பிட்ட ஒரு சமூகமே விழுங்கிவிட்டதால், இருளில் இல்லறம் நடத்தி வந்த இவர்களை அம்பேத்கர் என்னுமொரு ஜோதி வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்றது. மேற்குறிப்பிட்ட அந்த நாளில், சுமார் 3,65,000-கும் மேற்பட்ட தாழ்குடி மக்கள் வேத மதத்தை எதிர்க்கும், வர்ண பேதத்தை எதிர்க்கும், சமுத்துவத்தை போற்றும் பௌத்த மதத்தில் அம்பேத்கர் தலைமையில் தங்களை ஐக்கியமாக்கினர். அவர் கேட்கிறார்,” எங்கள் நிழலைக் கூட வெறுக்கும் கடவுளை நாங்கள் ஏன் வணங்க வேண்டும்?” வேத(ஹிந்து) மத வரலாற்றிலேயே மாபெரும் வெளியேற்றம் இதுவென இந்நாள் வரை கருதப்படுகிறது.
புரட்சிகர அமைப்புகளும், மதச்சார்பின்மை விரும்பிகளும் தீராத வகையில் கொண்டாடித் தீர்க்கும் இந்த வெளியேற்றம், சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகு.. அதாவது 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்திருந்தால், அம்பேத்கரையும் அவரின் சொச்ச 3,65,000 தாழ்த்தப்பட்டவர்களையும் நிரப்புவதற்காக, உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை ஒன்றை ஆளும் யோகி அரசு கட்டியிருக்கக் கூடும்! ஆம்! உத்தரப் பிரதேசத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மதமாற்ற (அவசர) சட்டம், “பெருந்திரள் மதமாற்றத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அதற்கு காரணமான அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்து கொடூர தண்டனைக்கு இட்டுச்செல்லவும்” வழிவகுக்கிறது. அதன் பின் இரண்டு மாத கால கெடுவில் உள்ளாட்சி நிர்வாகம் அந்த மதமாற்றத்தை தவறு என நிரூபிக்க தவறினால் மட்டுமே விடுதலை.
இந்த வழிவகையினால் மதமாற்றம் செய்வோரும், செய்வித்து வைப்போரும் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அம்பேத்கரைப் போலவே, மராத்திய பிராமணருள் சமஸ்கிருதப் புலமை வாய்ந்தவரான பண்டித ரமாபாயும் நாராயண வாமன் திலக்கும் மதங்களைப் பற்றி ஆழ ஆராய்ச்சி செய்த பின்னர் அரசியல் மற்றும் ஆன்மீக காரணத்திற்காக மதமாற்றத்தில் தங்களை ஈடுபடுத்தி இருக்கின்றனர். இத்தனை மதிப்பு வாய்ந்த (ஹிந்து உயர் குல) மனிதர்களையே இச்சட்டம் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கிறது என்றால், சாமானியர்களை விட்டு வைக்குமா என்று யோசிக்கவா வேண்டும்?
ஒரு ஏழை எளியன் தன்னுடைய கல்வி உரிமைக்கும், சுய-மரியாதைக்கும், வாழ்வாதாரத்திற்கும், அரசு சலுகைக்கும் ஆசைப்பட்டு கிருத்துவனாக மாற விரும்பினால் அவனை ஒரு சுகபோக விரும்பியாக – ஆசையில் லயத்துப் போனவனாக பட்டங் கட்டி, குற்றவாளி கூண்டில் நிறுத்த வழி செய்கிறது இந்த உ.பி அரசின் அவசர சட்டம். இந்த அவசர சட்டத்தில் பட்டியலினத்தவர்களையும் (SC/ST) பெண்களையும் சிறப்பு கவனத்தில் கொண்டு ஒரு அம்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதாவது பெண்களோ, SC/ST சமூகத்தினரோ மதமாற்றம் செய்யும் போது ‘மிகக்’ கடுமையான தண்டனைக்கு உள்ளாகலாம் என்ற குறிப்பு அதிலுள்ளது. 1956-ல் அம்பேத்கர் தலைமையில் ஹிந்து மதத்திலிருந்து பௌத்தத்துக்கு மதமாறியவர்கள் அனைவரும் ‘மதர்’ என்ற பட்டியலின பிரிவினரே.
அதிலும் சரிபாதி ‘பெண்களே’. “காலங்காலமாக கல்வியும் அதிகாரமும் கிடைக்கப்பெறாததால் வறுமைக்கும் பஞ்சத்திற்கும் ஆளாக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு ஒரே விடுதலை – அடிமைப்படுத்தும் மத அடையாளத்தில் இருந்து விடைபெறுவது தான்” என்று அம்பேத்கர் ஆராய்ந்து கண்டார். இதன் கசப்பை உணர்ந்த ஹிந்து மதம், சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்வினை ஆற்றவருகிறது.. இச்சட்டத்தின் மூலம் தனிநபரின் நலன்மீது தனிநபருக்கே உரிமை இல்லையென சொல்கிறதோ உத்தரப் பிரதேசம்? இஸ்லாமும் கிருத்துவமும் இந்தியாவிற்கு வருகை தந்தது முதலாக, அடிபட்ட இந்திய சமூகத்தின் ஆணிவேர்கள் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக விடுதலை பெற தங்களை அந்நிய நாட்டு மதமென்ற மரத்தில் ஏற்றி கிளைவிட்டு துளிர்க்கத் தொடங்கினர். பன்னெடுங்காலமாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மதமாறிய இரண்டொரு பொழுதுகளில் கிடைக்கப்பெற்றதை எண்ணி உச்சிமுகர்ந்தனர். 15 – ஆம் நூற்றாண்டுச் சார்ந்த கவிஞர் ரவிதாஸ், “பேகம்புரா” என்ற தன் கவிதையில் “சோகம் பூக்காத பூமியை” பின்வருமாறு புரிய வைக்கிறார்.
வரியும் இல்லை, குறையும் இல்லை.. எவருக்கு எதுவும் சொந்தமும் இல்லை,
தவறுகள் இல்லை, துன்பங்கள் இல்லை, தொல்லையும் தீவிரமும் எங்கும் இல்லை.
இதையோ அதையோ எதையும் செய்யலாம், அங்கோ இங்கோ எங்கும் போகலாம்,
மறுக்கப்பட்ட இடங்கள் எல்லாம், மதத்தை மாற்றி மறுபடி செல்லலாம்.
இனியும் ஒதுக்கப்பட்டவன் ஒதுங்கி வாழ்வானா?
ஓ! பின் வருபவர் எல்லாம் என் நண்பரே!
உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்த கபீரும் ரவிதாஸும் சமகாலத்திய கவிஞர்கள். அவர்களின் காலச் சக்கரத்தினூடகவே இஸ்லாமின் ஆன்ம விடுதலை கோட்பாட்டால் பல தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதன்பால் ஈர்க்கப்பட்டனர். வட இந்தியாவில் நிகழ்ந்த சூஃபி இயக்கமே ஆன்ம விடுதலை உச்சநிலை அடைய வழிவகுத்தது. உ.பி அவசர சட்டத்தின் மற்றொரு மையப்புள்ளி – ஹிந்துப் பெண்களை மதமாற்றம் செய்யும் முஸ்லிம் ஆண்கள். இந்த நடைமுறை 1920-களிலேயே உ.பி’ல் இருந்து வந்ததாக வரலாற்றாளர் சந்திர குப்தா பதிவு செய்துள்ளார். தன் தின இன்னல்களை தாளாத தலீத் பெண்கள் முஸல்மான்களை திருமணம் செய்து, அடிமை வாழ்விலிருந்து மீண்டு வந்தனர்.
‘சந்த்’ மற்றும் ‘அப்யூதயா’ இதழ்களில் வெளியான கட்டுரைகள் ‘தாழ்த்தப்பட்டவர்களை’ சமமாக நடத்த வேண்டிக் கொண்டது. இல்லையெனில் அவர்கள் முஸல்மான்களை திருமணம் செய்துகொண்டு, “பசுக் கொலை” செய்யும் பெண்மணிகளாகி விடுவார்கள் என எச்சரித்தது. உடனே இந்து மகாசபையும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி, உயர்சாதி ஆண்களுக்கு தலீத் பெண்களை திருமணம் செய்து வைத்தது. உண்மையான போராட்டம் இந்துக்களுக்கும் – முஸ்லீம்களுக்கும் எதிரானது அல்ல. டாக்டர். ராம் மனோகர் லோகியா சொல்வது போல, “அது இந்துக்களுக்கும் – இந்துக்களுக்கும் எதிரானது.” இந்திய வரலாற்றின் மிக நெடிய போராட்டம் ஜாதி இந்துகளுக்கும் – தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் எதிரானவையாகவே இருந்து வருகிறது. 5000 ஆண்டுகளாக இழுக்கடிக்கப்படும்’.
இப்போராட்டத்தின் மூல எரிவாயு “ஜாதி, வகுப்புவாதம், பெண்ணுரிமை, சகிப்புத்தன்மை.” “தலீத் பெண்கள் பேசுகிறார்கள்” என்ற ஆவணம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. 500 நேர்காணலுடன் வெளியான் அதன் பாதிக்கு மேலான பக்கங்கள், உயர் சாதியினர் செய்த பாலியல் வன்மத்தால் பதபதத்தது. அரசியல் அதிகாரத்தை அரவணைத்துக் கொண்டு ஆடும் உயிர் சாதி வன்மத்தை எதிர்த்து, புல்லாங்குழலின் நுண்ணிய துளைகளுக்கு ஊடாக வரும் மெல்லிய இசையைப் போல தலீத் பெண்களின் குரலும் உயர்த்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாள்தோறும் கண்முன்னதாகவே அரங்கேற்றப்படும் ஆணவ கொலைகள், ஜாதிய தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பின் நீதியின் மேலும் சமத்துவத்தின் மீதும் நம்பிக்கை வைத்தப்படி இந்தியாவின் ஒவ்வொரு இடுக்கிலும் வாடிப்போன வாழ்க்கையை வாழ்த்துவரும் இவர்களின் தேசப்பற்றுதான் எத்தன்மையது?
இந்திய அரசியலமைப்பின் உண்மை குடிகள் இவர்கள் தானே? இந்திய அரசியலமைப்பின் தந்தையே 1927-ம் ஆண்டின் நடுவில் ஊர்பட வைத்து ‘மனுஸ்மிருதியை’ தீ வைத்துக் கொளுத்தினார். இந்தியாவை ஆளப்போவது மனுஸ்மிருதி அன்று, நான் உருவாக்கும் சட்டப் புத்தகமே என்பதன் முன்மொழிவு அந்தத் தீவைப்பு! இறுதியாக இன்றைய வேற்றுமைகள் இங்கிருந்து தான் தொடங்குகின்றன.. “ஆச்சாரமான பிற்போக்காளர்கள் ஒருபக்கம் – முற்போக்காளர்கள் மறுபக்கம்; ஒடுக்குமுறை விரும்பாத இளைஞர் கூட்டம் ஒருபக்கம் – அடக்கி ஆள விரும்பும் பழந்தலைமுறை மறுபக்கம்; தன் விருப்பத்திற்கு மரியாதை கொடுக்கும் முற்போக்கு பெண்கள் ஒருபாங்கு – தன் ஐவிரல்களுக்குள் அழுத்தி வைக்கும் அவர்கள் குடும்பம் மறுபாங்கு; ஜாதி முறையில் வாழ விரும்பும் உயிர் வகுப்பு ஒரு பக்கம் – நீதிப்பெற்று சமுத்துவ வாழ்வை விரும்பும் தாழ்ந்த வகுப்பார் மறு பக்கம்” எதிர்பாராத விதமாக நாமிந்த போராட்டத்தின் மையத்தில் சிக்கியிருக்கிறோம். மனுவையா அம்பேத்கரையா யாருடைய நூலை நூலகக் கொண்டு மேலேறப் போகிறோம்? உத்தரப் பிரதேசம் உதிரப் பிரதேசம் ஆகிவிடுமுன் சிந்திப்போம்!
Published in TOI. Written by Sameena Dalwai, Professor, Jindal Global Law School.