இரண்டு நாட்களுக்கு முன்பு இளநிலை ஆராய்ச்சி (JRF) மற்றும் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான (SRF) உதவித்தொகை உயர்ந்திருப்பதாக ஓர் உவப்புச் செய்தியை ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
இதற்கு முன்பு வரை JRF நிலையில் ₹31,000 (p.m) மற்றும் SRF நிலையில் ₹35,000 (p.m) வழங்கி வந்தார்கள். தற்போது அதில் 19.4% உயர்த்தி முறையே ₹37,000 மற்றும் ₹42,000 என ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அறிவித்திருக்கிறார்கள்..
நான் இந்தச் செய்தியை நண்பர்களுக்கும் பேராசிரியருக்கும் உடனே அனுப்பி வைத்தேன். நெட் தேர்வு முடிந்த சமயமென்பதால் பலரும் இந்தச் செய்தியை ஆர்வத்தோடு அணுகினார்கள். நான் உட்பட யாரும் இதன்மீது எதிர்முறை கண்ணோட்டம் கொண்டிருக்கவில்லை. ஆனால் வெறும் 19.4% உயர்வு என்பது எத்தனை இழிவான ஏற்றம் என்று வடமாநில ஆராய்ச்சி மாணவர்கள் ட்விட்டரில் பகிர்ந்ததைப் பார்த்ததும் பகீர் என்றது.
உடனே நான் அதைப் பொது தளத்திலிருந்து சிந்திக்கத் தொடங்கினேன். இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களை நீங்கள் என்றேனும் பார்த்திருக்கிறீர்களா?
எனக்கு தமிழ்நாடு தாண்டி பரிட்சயம் கிடையாது. அறிவியல் துறை ஆய்வுகள் பற்றி ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டும் அறிவேன். ஆக நான் இங்கு பேச விரும்புவது தமிழ்நாட்டு நில எல்லைக்குட்பட்ட கலையியல் புலம் சார்ந்த ஆராய்ச்சிகளை மட்டுந்தான்.
இளங்கலையில் மூன்று வருடம், முதுகலையில் இரண்டு வருடம் முடித்து மீண்டும் மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவர் எத்தனைத் துயரங்களை தாண்டிவர வேண்டும் தெரியுமா? தன் குடும்பத்தைச் சமாதானம் செய்யவே போதுமென்று ஆகிவிடும்.
தன் சக நண்பர்கள் சுயமாக வேலைக்குப் போய் பொருளாதார பாதையில் தன்னிறைவு அடைந்திருப்பதையும், தன் கல்விப் புல வளர்ச்சியையும் ஒப்பீட்டுப் பார்க்கும் வெறுமையும் கண்ணீரும் நிறைந்த சில ஆராய்ச்சி மாணவர்களின் விடுதி இரவு நாட்களை நான் பார்த்திருக்கிறேன்.
இந்தச் சமயத்தில் இவர்களுக்கு உள்ள ஒரே துணை, இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை மட்டுந்தான். முன்பிருந்த 31,000 (JRF) ரூபாய் என்ற வரம்பு 2019ஆம் ஆண்டு அதற்குமுன்பிருந்த 2010ஆம் ஆண்டின் 16,000 (JRF) ரூபாய் என்ற வரம்பிலிருந்து 56.3% உயர்த்தி 25,000ஆக நிர்ணயிக்கப்பட்டது.
56.3% எங்கே, 19.4% எங்கே? அனைத்திந்திய ஆராய்ச்சி மாணவர்கள் சங்கம் சார்பாக இந்த உதவித்தொகையினை 60% வரை உயர்த்திக் கொடுக்கச் சொல்லி DST யிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். கூடவே இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முறையானதோர் ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடு செய்துதர கோரிக்கை வைத்துள்ளனர்.
இத்தனைக்கும் இது எல்லோருக்கும் வாரி வழங்குவது இல்லையே? முறையான நெறிகளைப் பின்பற்றி ஆண்டுக்கு இருமுறை தேசிய தேர்வு முகமையின் ஆளுகையில் தேசிய தகுதித் தேர்வு நடத்தி, அதில் பாடவாரியாக தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை.
அறிவியல் துறையில் இளங்கலை மட்டும் முடித்துவிட்டு மாதம் 40K பேக்கேஜ்ஜில் இருப்பவர்களுக்கும் முதுகலை முடித்தும் அதே பேக்கேஜிலான உதவித்தொகையில் அதற்கு மேம்பட்ட ஆராய்ச்சிகளை செய்பவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா?
இல்லை, அவர்கள் ஆராய்ச்சியை முடித்து பிறகாவது அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறதா? மொழி சார்ந்த பாடங்களில் முதுகலை முடித்த மாணவர்கள் வெறும் 12K, 15K வேலைக்குச் செல்கிறார்கள். முனைவர் பட்ட ஆய்விற்குப் பிறகும் கூட தனியார் கல்வி நிறுவனங்கள் வெறும் 18K, 21K மாதச் சம்பளம் வழங்குவது முனைவர் பட்ட ஆய்வின் மீது வெறுப்பையும் மண்ணையும் வாரி தூற்றுகிறது. அதைத்தாண்டியும் சில மாணவர்கள் உயராய்வில் ஈடுபடுவதற்கு இரண்டே காரணங்கள். ஒன்று, ஆய்வுப் புலத்தின் மீதுள்ள ஈடுபாடு. மற்றொன்று, அரசு வழங்கும் உதவித்தொகை.
இப்போது NON-NET உதவித்தொகைக்கான போராட்டமும் பலமாக வலுத்துள்ளது. 2006ல் இருந்து இந்தத் தொகை மாறவே இல்லை. மத்தியப் பல்கலைக்கழகங்களில் இருந்து மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பலரும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழக அளவில் ‘எனக்குத் தெரிந்தவரை’ இந்த விஷயத்தைப் பற்றி யாருமே பேசவில்லை. மீண்டுமிது பல நாட்களாக நான் சொல்லிக் கொண்டிருக்கும் மாணவர் இயக்கங்களின் வெற்றிடத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
இத்தகைய உதவித்தொகையின் உயர்வு சதவீதம் இறங்குமுகம் காண்பது, இந்திய உயராய்வுகளின் முடிவுக்காலத்திற்கு தொடக்கவிழா எடுக்கும் சமிக்ஞை.