கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு எதிரே, தொடர்ந்து 81 வருடங்களாக ஹோட்டல் நடத்திவருகிறார், ரத்னவேல். `டேஸ்ட்டான உணவை, வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டா 5 ரூபாய் நாணயம் வழங்கப்படும்’ என்ற அறிவிப்போடு நம்மை வரவேற்றது, ராயல் ஹிந்து ரெஸ்டாரன்ட் (ஆர்.ஹெச்.ஆர்). லாபம் என்ற கடிவாளத்தில் கண்ணைக் கட்டி இயங்கும் ஹோட்டல்களுக்கு மத்தியில், சமூகப் பார்வையை விசாலமாக்கியிருந்தார் ஆர்.ஹெச்.ஆர் மேலாளர் ரத்னவேல். மேலாளரின் மகன் குருமூர்த்தி நம்மிடம் பேசினார்.
“இந்த ஹோட்டல், 1931-ல் எங்க தாத்தா குருசாமி தொடங்கியது. அன்றிலிருந்து 88 வருஷமா சுவையும் தரமும்தான் எங்க ஹோட்டலில் நிர்வாகம் செஞ்சிட்டு இருக்கு. நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கேன். அதில் படித்த பாடம், இத்தனை வருஷம் ஹோட்டல் நடத்தின அனுபவம், என்னை இந்தத் துறையில் ஏதாவது புதுமை படைக்கத் தூண்டியது.”
“ஹோட்டல் துறையில் மிகப்பெரிய பிரச்னை, ஃபுட் வேஸ்ட்டிங் தான். கஸ்டமர்ஸ் எப்போவும் பிடிக்காத உணவை இது வேணாம், அது வேணாம்னு சொல்ல மாட்டாங்க. உப்பு, ஊறுகாய் ஆரம்பித்து தயிர், சேமியா, பாயசம் வரை எல்லாத்தையும் வாங்கிட்டு, பாதியை இலையிலே கைகழுவிடுவாங்க. இதை சரி செய்ய என்ன செய்யலாம்னு யோசிச்சோம். அப்ப உதிச்சதுதான் இந்த திட்டம். வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டால், இலைக்கு 5 ரூபாய் திருப்பிக் கொடுக்கலாம்னு முடிவுசெய்து, அதை உடனே நடைமுறைப்படுத்தினோம்” என்றார்.
“ஒவ்வொரு கஸ்டமரும், உணவு ஆர்டர் செய்யும்போது இருக்கும் மனநிலை கடைசியில இருக்காது. பாதி பதார்த்தம் இலையிலேயே தங்கிடும். எடுத்து குப்பையில போடும்போது மனசு கஷ்டமா இருக்கும். இந்த திட்டம் தொடங்கி ஒரு வாரம் தான் ஆச்சு. 5 ரூபாய் மீதி தர்றதால, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துதான் வாங்குறாங்க. பிடிக்காத ஐட்டமா இருந்தா, வைக்கும்போதே வேண்டாம்னு சொல்லிடுறாங்க. எங்களுக்கும் மனசு நிறைவா இருக்கு. உணவு மீதமிருந்தா, பக்கத்துல இருக்கும் அரசு மருத்துவமனையிலும், ஆசிரமத்திலும் கொடுத்துடுவோம்” என்றனர் கடை ஊழியர்கள்.
வாடிக்கையாளர் ஒருவர் பேசுகையில், “இது அற்புதமான திட்டம். ஹோட்டலில் சாப்பிடும்போது, இது வேண்டாம்… அது வேண்டாம் என்று நாங்கள் சொல்வதற்குக்கூட வாய்ப்பு இருப்பதில்லை. எல்லா பதார்த்தங்களும் சம்பிரதாயப்படி அடுக்கப்படுகின்றன. ஆனால், இங்கே ஒவ்வொன்றும் கேள்வியுடனும் விருப்பத்துடனுமே பரிமாரப்படுகிறது. ஆனால், ஃபுல் மீல்ஸில் வாடிக்கையாளர் உண்ணும் பதார்த்தங்களுக்கு மட்டுமே பில் செலுத்த எல்லா உணவகங்களும் வழி செய்தால், பெரும்பாலும் வேஸ்டேஜ் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை வியாபாரம் என்ற ரீதியில் கருதாமல், சமூகப் பார்வையோடு அணுகினால் தீர்வு கிடைக்கும்” என்றார்.
“இந்த காலத்தில் சின்னச்சின்ன தொழில் முனைவோர்களும் தள்ளுவண்டிக் கடைகளும் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் சுவை, தரம், விலை அனைத்தையும் சரிநிகர் சமாக வைப்பது அத்தியாவசியமாகிறது. மக்கள், மறுபடியும் பாரம்பர்யத்துக்கே திரும்புறாங்க. அதனால இளநீர் ஜெல்லி, கம்பு தோசை, கம்பு புட்டு, ராகி தோசை, ராகி புட்டு, சோள தோசை போன்ற உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கஷ்டமரின் ஃபீட்பேக் எங்களை வளர்த்துவருகிறது. மூன்று நாள் முன்னதாக ஒரு பெரியவர், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு இதைச் சொல்லப்போவதாக எழுதிவைத்து, `இது ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துகள்!’ என்றும் வாழ்த்திவிட்டு சென்றார்” என்று பூரிக்கிறார் குருமூர்த்தி.
மேலும், இந்த ஹோட்டலில் அரசு பிளாஸ்டிக் தடை செய்யும் முன்பே, ஸ்வீட் போன்ற உணவுகளுக்கு பாக்கு மட்டை போன்ற இயற்கைக்கு உகந்த பைகளைப் பயன்படுத்தினர். இப்போது, துணிப்பையும் பயன்படுத்திவருகின்றனர். பஃபே சிஸ்டம் போன்ற சில வழிமுறைகளால் உணவு வீணாவதைத் தடுக்க முடிந்தாலும், இலையிட்டு அமர்ந்து பரிமாரி உணவு உண்ட நம் பாரம்பர்யம் இதை சற்றே இடைமறிக்கிறது. இதை எல்லாம் தாண்டி, இத்தகைய திட்டங்களால் மக்களைக் கவர்ந்தால், உணவு வீணாவதைத் தடுக்கலாம் என்பதற்கு ஆர்.ஹெச்.ஆர் ஒரு முன் உதாரணம்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, 2019-ம் ஆண்டின் உலகலாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவில் மட்டும் 194.4 மில்லியன் மக்கள், அதாவது இந்திய மக்கள் தொகையில் 14.5% பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 20.8% பேர் எடைக் குறைவு பிரச்னையால் அவதிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.