spot_img
Sunday, December 22, 2024

இமயமலையில் புற்கள் – பருவநிலை மாற்றப் பேரழிவின் ஆரம்பமா?

`காலநிலை மாற்றமும் தமிழகமும்” என்ற தலைப்பில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையுரை வழங்கினார். `ஓசை’ அமைப்பைச் சேர்ந்த காளிதாசன், `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் உட்பட பலரும் கலந்துகொண்டு பருவநிலை மாற்றம் குறித்த பல கருத்துகளையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

முதலாவதாகப் பேசிய காளிதாசன், பருவநிலை மாற்றம் பற்றி விளக்கினார். “2015-ம் ஆண்டு, பாரிஸ் ஒப்பந்தம் மூலமாக உலக நாடுகள் அனைத்தும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உறுதியேற்றன. ஆனால், அமெரிக்காவில் ஆட்சி மாறியதும், ஒபாமா கையெழுத்திட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் வெளியேறினார். அப்போது மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், ட்ரம்புக்கு எழுதிய கடிதமொன்றில், `எங்கள் சொந்தச் செலவில் உங்களை ஒரு பயணம் அனுப்பி வைக்கிறோம்’ என்றிருந்தார். அது வெள்ளி கிரகத்துக்கான பயணம்! வெள்ளி கிரகத்துக்கு ஏன்?” என்ற கேள்வியெழுப்பிய காளிதாசன் மேற்கொண்டு,

“அதற்குப் பின்னால்தான் பருவநிலை மாற்றம் மறைந்துள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் புதன். நியாயப்படி பார்த்தால் புதன்தான் வெப்பமாக இருக்க வேண்டும். ஆனால், புதனைவிட அதற்கடுத்து உள்ள வெள்ளி கிரகம் வெப்பம் மிகுந்து காணப்படுகிறது.‌ இதற்குக் காரணம் அங்குள்ள வளிமண்டலம். பூமிக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய அப்படிப்பட்ட வளிமண்டலம் அழிந்ததுதான், இங்கு ஏற்பட்டுள்ள இன்றைய பருவநிலை மாற்றத்துக்குக் காரணம்!” என்றார்.

தொடர்ந்து பேசிய பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தரராஜன், “பசுமை இல்ல வாயுக்கள் ஒன்றும் நம் எதிரிகள் அல்ல. அவை இல்லை என்றால், நமது பூமி உறைந்து பனிக்கட்டியாகி இருக்கும். ஆனால், அவை தம் அளவை மிஞ்சினால் நம்மை எரித்துப் பொசுக்கிவிடும். இயற்கையை நாம் துன்புறுத்தாதவரை, அதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவரை ஆபத்து ஏற்படவே இல்லை. உதாரணத்துக்கு, 2004-ம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி வந்தது. வளர்ச்சியடைந்த தமிழகத்தில் 20,000 பேர் உயிரிழந்தனர்.‌ ஆனால், இலையில் ஆடை உடுத்திய ஜாரவா பழங்குடியினரில் ஒருவர்கூடப் பாதிக்கப்படவில்லை.

15 ஆண்டுகளுக்கு முன்பும் கொசுக்கள் இருந்தன. ஆனால், டெங்கு போன்ற நோய்கள் இல்லை. அன்றெல்லாம் கொசுக்கள் இடும் முட்டையைத் தவளைகள் சாப்பிட்டுவிடும். அதை அறிந்து கொண்ட கொசுக்கள் தேங்கிய நீர்நிலைகளில் லாகவமாக முட்டையிட்டுப் பெருகுகின்றன. சமீபத்தில்தான், கேப் டவுன் நகரம் தண்ணீரின்றி `ஜீரோ வாட்டர் டே’ ஆபத்தை அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறது. அதற்கான அறிகுறிதான் சென்னை – ஜோலார்பேட்டை ரயில் தண்ணீர் திட்டமெல்லாம். மன்னார் வளைகுடாவில் 21 தீவுகள் இருந்தன. ஆனால், தற்போது 19 தீவுகளே உள்ளன. இதிலும் 6 தீவுகள் 2030-க்குள் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளன. மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது நம் பொறுப்பு” என்று முடித்தார்.

அடுத்ததாகப் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் சுற்றுச்சூழல் துறைத்தலைவர் லட்சுமணப் பெருமாள்சாமி பேசினார். உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தங்களை விளக்கிய அவர்,‌ “காலநிலை மாற்றம் என்ற சொல்லாடலை முதன்முதலில் 1988-ம் ஆண்டு ஜேம்ஸ் ஹேன்சன் (James Hansen) என்பவர் அமெரிக்க செனட்டில் முன்மொழிந்தார். அன்றே புவி வெப்பமயமாதலின் தீவிரத்தை மக்களிடம் முதன்முறையாக அவர் எடுத்துக் கூறினார். ஆனால், பலரும் பரிகசித்தனர். ஆனால், இன்று IPCC என்றொரு நிறுவனம் அமைத்து ஐ.நாவே தலையிடும் அளவுக்கு அது தீவிரமான விஷயமாக மாறிவிடும் என்பதை அன்று யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு மாதம் முன்பாக நாசா வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படம் ஒன்றில் இமயமலையில் புற்கள் முளைத்திருப்பது தெரியவந்தது. எத்தனை பெரிய ஆபத்து இது! இனி வரும் காலங்களில் உண்மையில் கிரீன்லாந்து, `கிரீன்’லாந்து ஆகிவிடும் போலிருக்கிறது. கார்பன்டை ஆக்சைடை நிலத்தில் கொட்டிக் கல்லாக மாற்றும் தொழில்நுட்பத்தை உலகநாடுகள் பின்பற்ற தொடங்கிவிட்டன. நாமும் அதற்கு ஏற்றாற்போல மாற வேண்டும். இன்று சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதும்கூட பருவநிலை காரணியாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. புவியின் வெப்பம் அதிகரிக்கும்போது, கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கின்றன.‌ இதனால் கொசுக்களால் வரும் பாதிப்புகளும் அதிகமாகலாம்” என்றார்.

இறுதியாக தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜனகராஜன் பேசினார். “புவியின் வெப்பம் 1.1°C ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 12 ஆண்டுகள்தான் நமக்குக் கெடு விடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் 1.5°C-ஐ தொட்டுவிட்டால், நம்மால் உலகை எப்போதுமே கட்டுக்குள் கொண்டு வர முடியாது. நிலைமை இப்படியே சென்றால் உயர் நீதிமன்றம், சட்டசபை உட்பட மொத்த சென்னையுமே கடலில் மூழ்கிவிடும். நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்கள் எல்லாம் மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளன. பரந்த நோக்கில் பார்த்தால் பங்களாதேஷ், மும்பை, கொல்கத்தா பகுதிகளும் மூழ்கிவிடும். 

மாலத்தீவு வாசிகள் முழுவதும் கனடா பெயர்வதற்கான திட்டங்களை இப்போதே ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை காலநிலை மாற்றத்துக்காக ஏற்படுத்திய சர்வதேச கூட்டங்கள் எதுவும் தீர்மானத்தை முன்மொழியவில்லை.

17 வயது கிரெட்டாவை நாம் தற்போது தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், 1992-ம் ஆண்டு நடந்த ஐ.நா உச்சிமாநாட்டில், தன்னுடைய 12 வயதிலேயே செவர்ன் குல்லிஸ் சுசூகி (Severn Cullis Suzuki) என்ற பெண் காலநிலை மாற்றம் குறித்து உரையாடினார். அதையெல்லாம் செவிகொடுத்துக் கேட்டிருந்தால், இன்று இந்த நிலையே வந்திருக்காது!” என்றார்.

உண்மைதான், நாம் பல எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி அழிவின் விளிம்பில் வந்து நின்றுவிட்டோம். இனியும் புறந்தள்ளினால், அழிந்தேவிடுவோம் என்ற எச்சரிக்கை உணர்வை இந்தக் கருத்தரங்கம் அங்கு வந்திருந்தவர்களுக்கு உணர்த்தியது.

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்