Sigmund Freud’s open reply to a mother seeking treatment for her homosexual son. (Tamil translation by IsKra)
ஏப்ரல் 9, 1935.
அன்பிற்குரிய (பெயர் அழிக்கப்பட்டுள்ளது)
உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சில மேல்பூச்சு கீழ்ப்பூச்சுக் குறிப்புகளைத் தூசித்தட்டி ஆராய்கையில், உங்கள் மகன் தன்பாலின ஈர்ப்பு உடையவன் என வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆனால் அந்தப் பதத்தை மிக இலாவகமாக, நீங்கள் எங்கும் பயன்படுத்தாமல் வேண்டுமென்றே தவிர்த்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எது உங்களைத் தடுக்கிறது?
நிச்சயமாக தன்பாலின ஈர்ப்பு என்பது ஒரு வரம் அல்ல. அதே சமயம் வெட்கப்பட வேண்டிய, சாபக்கேடான, தரம் தாழ்ந்த, எந்தவொரு அசிங்கமான நோயும் அல்ல. பாலின குறைபாட்டால் உடலில் ஏற்படும் மெல்லிய வேதியல் மாறுபாடு.
அவ்வளவுதான். நீங்கள் பெரிதும் மதிக்கிற மேன்மை மிக்க மனிதர்களுள் பலர், தன்பாலின ஈர்ப்பு உடையவர்களாகவே வளர்ந்து, வாழ்ந்து, மாசுபடாமல் மறைந்திருக்கிறார்கள். பிளாட்டோ, மைக்கேல் ஏஞ்சலோ, லியொனார்டோ டாவின்சி போன்றோர் அதில் சிலர்.
தன்பாலின ஈர்ப்பை குற்றமாகவும் குறையாகவும் கருதுவது மாபெரும் அநீதி. என்னை நம்பவில்லை என்றால், ஹேவ்லாக் எல்லீஸ் எழுதிய புத்தகங்களை வாசியுங்கள்.
ஒருவேளை “உங்களால் தன்பாலின ஈர்ப்பை சரிசெய்து, எதிர்பாலின ஈர்ப்பை ஏற்படுத்த முடியாதா?” என்று என்னிடம் கேள்வி எழுப்புவீர்களே ஆனால், “என்னால் நிச்சயம் உறுதிபடக் கூற முடியாது” என்று அப்பட்டமாக சொல்லிவிடுவேன்.
சில சந்தர்பங்களில் எதிர்பாலின ஈர்ப்பு உடையவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள அதே வேதியல் கூறுகளை தன்பாலின ஈர்ப்பு உடையவர்களிடமும் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் எல்லா சமயமும் அது வெற்றிப் பெறுவதில்லை. உட்படும் நபரின் உடல்வாகையும் வயதையும் ஒத்தே இறுதி முடிவை சொல்ல முடியும்.
சமூகத்தில் தனித்திருக்கும் உங்கள் மகனை, என்னால் ஒருவகையில் மட்டுமே திருப்தி செய்ய முடியும். துன்பம் சூழ்ந்து, நரம்பியல் கோளாறுக்கு ஆட்பட்டால் முரண்பட்ட சமூகத்திலிருந்து எள்ளி நகையாடப்படும் அவனை அமைதியும் ஒருமுகமும் சூழ என்னால் சாந்தப் படுத்த முடியும்.
தன்பாலின ஈர்ப்போ, எதிர்பாலின ஈர்ப்போ எதுவாயிருந்தாலும் என்னால் அவனைச் சாந்தப்படுத்த முடியும்.
உங்களுக்கு சரியெனப்பட்டால், வியன்னாவில் உள்ள என்னைச் சந்திக்க முறைப்படி முன்னேற்பாடு செய்துவிட்டு வாருங்கள். (வரமாட்டீர்கள் என எண்ணுகிறேன்) இருந்தாலும் தவிர்க்காமல் பதில் எழுதுங்கள்.