பொற்காலம்.
எத்தனை அபத்தமான வார்த்தை இது. பொற்காலம் என்ற ஒன்று உண்மையிலேயே உண்டா? அப்படியிருப்பின் அது எப்படி கணக்கிடப்படுகிறது? ஒத்த கொள்கை உள்ள ஒரு சிலருக்கு பொற்காலமாய் திகழும் ஒரு காலம், மாற்று சித்தாந்தம் உடைய மற்றவருக்கு எப்படி நல்வினை புரியும் நற்காலமாகும்?
ஆக பொற்காலங்கள் பற்றி நாம் படித்து வருவதும் – சிந்திந்து வருவதும் ஏகபோகமான நடுநிலை சாராத புரட்டுப் புராணங்களைத் தானா? ‘பொற்காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை. எல்லா காலங்களிலும் எல்லாமும் இருந்திருக்கின்றன’ என்ற டி.டி. கோசாம்பியின் வார்த்தையில்தான் எத்தனை உண்மை இருக்கிறது! வரலாற்றின் சமவெளியில் சமயத்தோடு ஒட்டிய பொற்காலப் பார்வைகளை சற்றே இப்பதிவின்வழி தரிசனம் செய்வோம்.
இறைவன் இருப்பு பற்றிய அனைத்துச் சமயக் கோட்பாடுகளும் அதீத கேள்விகளுக்குப் பிறகு முட்டுச்சந்தில் வந்து நிற்பது இன்று – நேற்று கதை அல்ல. யூத மண்ணிலிருந்து கிறிஸ்தவம் புறப்படும் முன்னர்வரை, “இயேசு என்றழைக்கப்பட்ட ஜோஸ்வா சாதாரண மனிதராகத்தான் இருந்தார்.” 19,20-ம் நூற்றாண்டு மேற்கத்திய தத்துவ ஞானிகள் கூட இயேசுவை ஒரு மகாபுருஷராகவே ஏற்றுக் கொள்கிறார்கள். மிதமிஞ்சிய மதபோதகர்களே இயேசுவை அசாத்திய பிம்பமாக உருவேற்றியுள்ளனர்.
டேன் பிரவுன் எழுதிய ‘தி டேவின்சி கோட்’ புதினம் இந்த மறைமுக அரசியலை வெட்டவெளிக்கு கொண்டுவந்தது.
இயேசு பிறந்த 500 ஆண்டுகளுக்குப் பின், அதே புவியியல் பின்னணியில் நபிகள் தோன்றினார். அவரை இன்றளவும் இறைவனாக எண்ணாமல், இறைத் தூதராகவே இஸ்லாமியர்கள் கருதி வருகின்றனர். மேற்சொன்ன இருவரும் மத்தியக் கிழக்கு நாட்டின் போர் நிறைந்த – இரத்தம் சிந்திய – கொடுங்கோன்மை நிரம்பிய காலவெளியில் தோன்றியமை அவர்தம் வரலாற்றின்வழி அறியக் கிடைக்கின்றது. இருந்தும் எண்ணிலடங்கா அற்புதங்கள் செய்தவர்களாக இவ்விருவர் மேல் சொல்லொணா கட்டுக்கதைகள் பின்னப்பட்டுள்ளன.
இதை ஆராய முற்படும் ஒருவனை..
லூக்கா 4:12 படி – “ உன் தேவனாகிய கர்த்தாவைப் பரீட்சை பாராதிருப்பாயாக” என்று இயேசுவே சொன்னதாக வேதாகமம் சொல்வதும், (THE HOLY BIBLE)
தன்னை நம்பாதவர்களை “அல்லாஹ் பரிகசிக்கிறான். இன்னும் அவர்களின் வழி கேட்டிலேயே அவர்கள் தடுமாறுகிறவர்களாக அவர்களை விட்டு வைத்திருக்கிறான்” (THE HOLY QURAN)
என்று அல்பகரா-15 படி திருக்குரான் சொல்வதும் பகுத்தறிவை வளர்க்காமல் எத்தகைய பொற்காலத்தில்(?) உலக மதங்கள் தோன்றியிருக்கின்றன என்பதற்கான சான்றுகளாய்த் திகழ்கின்றன.
தற்போது இந்தியச் சூழலுக்கு வருவோம்.
நீண்ட நெடுங்காலமாகவே மரபு சார்ந்தொரு கருத்து நம் நாகரிகத்தை சோதனைக்குள்ளாக்கி வருகிறது. குறிப்பாக முன்னோர்கள் என்றாலே அறிவாளிகள், உன்னத சமூகம், சமுத்துவம் நிறைந்த கனவுலக வாழ்க்கை என்றெல்லாம் மெருகேற்றி வைத்துள்ளனர்.
“கிராமச் சமூகங்கள் குட்டிக் குடியரசுகள்; தேவையான அனைத்தையும் தங்களுக்குள் பெற்றிருந்தன. இங்கு அயலார் தலையீடு பெரும்பாலும் இல்லை. இவை மற்ற நிறுவனங்கள் வீழ்ச்சியுற்ற போதும் நிலை பெற்று நின்றுள்ளன; புரட்சிக்குப் பின்னர் புரட்சி தோன்றுகிறது ஆயினும் கிராம சமூகம் மட்டும் அதுவாகவே நிலை பெற்றுள்ளது” என்ற சர். சார்லஸ் டி. மெட்காவு இந்தியா பற்றி குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.
பிற்காலச் சோழர்களின் ஆட்சி ஆண்டை பொற்காலமென்று மெச்சிக் கொண்டாடும் நம்மவர்கள், அதே காலத்தில் தான் சாதி வேற்றுமைகள் அத்தனைக் கொடுமையாக கூத்தாடியது என்பதை ஏன் மறுக்கிறார்கள். ஜப்பான் நாட்டைச் சார்ந்த பிரபல ஆய்வாளர் நொபொரு கராஷிமா ஆய்ந்தெழுதிய கல்வெட்டு குறிப்பில்,
“சுடுகாடுகளைக் கொண்ட 24 ஊர்களில் 8 ஊர்களில் வேளாளருக்கும் பறையருக்கும் தனித் தனியான சுடுகாடுகள் சொல்லப்பட்டுள்ளன. இதனால் அவ்வூர்ச் சமூகத்தில் வேளாளரும் பறையரும் ஒதுங்கி வாழ்ந்தனர் என்பதை இக்கல்வெட்டு மெய்ப்பிக்கிறது” என்று சோழ மண்டலம் பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார். (A concise history of south india)
மேலும், “ மூன்று வகை ஊரிருக்கைப் பகுதிகளை அரச ஆணை குறிப்பிடுகிறது. ஊர் நத்தம், பறைச்சேரி (பறையர் குடியிருப்புப் பகுதி), கம்மாணச்சேரி (கம்மாளர் குடியிருப்புப் பகுதி).” இவையே பிளவுபட்டமையின் முதன்மை சான்றாதாரமாகிறது.
மேலும் பாண்டியர் காலத்திய கல்வெட்டுக்களில் (திருச்சிராப்பள்ளி – புதுக்கோட்டை பகுதி கல்வெட்டுத் தொகுப்பு), இனவரி விதிக்கப்பட்டமைக்கான சான்றுகள் வெளிவருகின்றன. (இனவரி – ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மீது விதிக்கப்பட்ட வரி) சமூக வாழ்வு பற்றியான எல்லாவித பகுப்பாய்வையும் இக்காலச் சமய வரலாறு தட்டையாக்கி விடுகிறது. இதன்பொருட்டே பொற்காலம் குறித்தான ஆய்வை சமய நோக்கில் மேற்கொள்ள முற்படுகிறேன். இந்தியாவின் பெரும்பான்மை என தம்மை குறிப்பிட்டுக் கொள்ளும் ஒரு சாரர்,
“இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் வந்தேறிகள் என்று சொல்லியே மத துவேஷத்தை அள்ளிப் போடுகின்றனர். ஆனால் அவர்கள் படையெடுத்துவர யார் காரணம் என்பதை மட்டும் பக்குவமாக மறைத்துவிடுகிறார்கள்”
பாபர் படையெடுப்பில் ராஜபுத்திர மன்னரின் சூழ்ச்சி
தில்லி சுல்தானியத்தின் 5-வது வம்சமாக லோதிகள் ஆட்சி செய்து வந்தனர். லோதிகளுள் குறிப்பிடத்தகுந்த மன்னராகத் திகழ்ந்தவர் ‘சிக்கந்தர் லோதி’. புகழ்பெற்ற ஆக்ரா நகரம் இவர் ஆட்சியாண்டில் தான் வடிவமைக்கப்பட்டது. இவருக்கு அடுத்து அரியணை ஏறியவர் இப்ராஹிம் லோதி.
இப்ராஹிம் லோதி மேல் இயற்கையாகவே பகை கொண்ட அவனின் மாமா தௌலத் கான் லோதி ராஜபுத்திர மன்னரான மேவாரின் ரானா சங்காவை உதவிக்கு அழைத்தான். ரானா சங்காவும் தௌலத் கானும் மாமன் மச்சினன் உறவா என்ன? ஒன்றுகூடி ஆட்சியைக் கலைத்துவிட்டு, பின்னர் பொறுமையாகப் பங்கு பிரித்து கொள்ளலாம் என்ற எண்ணப்பாடுதான்!
எப்படியடா ஹிந்துஸ்தானத்தில் நுழையலாம் என்று ஆடிப்போயிருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கொடுத்த கீ மாதிரி தௌலத் கான் மற்றும் ரானா சங்காவின் அழைப்புக் கடிதம் பாபரை வந்து சேர்ந்தது. பிரித்துப் படித்தார். ‘இந்தியா வர முடியுமா?’
நான்லாம் பாய்சன் கெடச்சாவே பாயாசம் மாதிரி சாப்பிடுவேன். பாயாசமே கெடச்சிருக்கு விடுவேனா?!
குதிரையைப் பூட்டி கிளம்பிவிட்டார் பாபர். 2-3 நாட்களுக்குப் பின்தான் தௌலத் கானின் மூளை செயல்படத் தொடங்கியது. ‘உதவிக்கு வந்தோம். போனோம் என்றில்லாமல் பாபர் இந்தியாவை நிரந்தரமாகக் கைப்பற்றப் போகிறார்’ என்று அரசல் புரசலாகக் கேள்விப்பட்டார். உதவிக்கு வந்தவரை எதிர்த்தே போர்கொடித் தூக்கினார். 1525-ல் லாகூரில் நடைபெற்ற இப்போரில் தௌலத் கானை அசால்ட்டாக சம்பவம் செய்தார் பாபர்.
பின் 1526-ல் இப்ராஹிம் லோதியை கொன்றுவிட்டு, பழைய பாக்கியான ராஜபுத்திர மன்னர் ரானா சங்காவை 1527-ல் நடைபெற்ற கன்வா போரில் தோற்கடித்தார். பின் அந்த ராஜபுத்திர மன்னரை அவரின் பிரபுக்களே விஷம் கொடுத்து கொன்ற சங்கதியும் அரங்கேறி முடித்தது!
இனிமேல் முகலாயப் படையெடுப்பை பற்றி பேசுபவர்கள், அதற்குக் காரணமாயிருந்த ஹிந்து மன்னரையும் பேச வேண்டும். முகலாயிருக்கு முன்பு பொற்கால பூமியிங்கு பொங்கி வழிந்ததாக குறிப்பிடும் ஒரு சிலர் கண்ணில் படும்வரை இச்செய்தி பகிரப்பட வேண்டும்.
மாலிக் கபூரும் பாண்டியர்களும்
பிற்காலப் பாண்டியப் பேரரசின் புகழ்ப்பெற்ற அரசர் சடைய வர்மன் சுந்தரபாண்டியன் (1251-1268). இவரை ஜடா வர்மர் என்றும் அழைப்பர். சுந்தர பாண்டியனுக்குப் பிறகு மாறவர்மன் குலசேகரன் வெற்றிகரமாக நாற்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்து நாட்டிற்கு அமைதியும் செழிப்பும் நல்கியதாக சொல்லுகிறார்கள். அவருக்கு வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.
அரசர் வீரபாண்டியனை கூட்டு அரசராக நியமித்தார். இதனால் கோபமுற்ற இன்னொரு மகன் (சுந்தர பாண்டியன்) தன் தந்தையான மாறவர்மன் குலசேகரனை கொன்றார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டு போரில் வீரபாண்டியன் வெற்றிப் பெற்று தன்னை வலுவாக நிறுத்திக் கொண்டார்.
“தோல்வியுற்ற சுந்தர பாண்டியனோ தில்லிக்கு விரைந்து அலாவுதீன் கில்ஜியின் அடைக்கலத்தை நாடினார். இதுவே மாலிக் கபூரின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது. இதன் விளைவாகவே மதுரையில் டெல்லி சுல்தானுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது.”
எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் விடுதலைப் போர் – இரண்டொரு சம்பவங்களுடனோ, இரண்டொரு வெற்றிகளுடனோ முடிந்துவிடுவதில்லை – அது நீண்டதொரு பயணம் என்று அறிஞர் அண்ணா சொல்வார். அது நூற்றுக்கு நூறு உண்மை. வரலாறு என்பது வெறும் போர்களால் அல்ல – அந்தப் போரை ஏற்படுத்திய காரணிகளால் உருவாகிறது. காரணியை கழட்டிவிட்டு கருத்தாவை தோண்டுவதால் துவேஷம் அன்றி வேறெந்த பலனும் இல்லை.
மாலிக் கபூரின் படையெடுப்பால் காஞ்சிபுரம் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை, ஶிரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் எல்லாம் பெருத்த சேதத்திற்கு உள்ளானதென குறிப்பிடும் தேச பக்தர்கள், அதற்கு காரணமாயிருந்த பொற்காலப் பாண்டியனை ஏன் கைநீட்ட மறுக்கிறார்கள்?
அருணகிரிநாதரும் ஆறுமுகக் கடவுளும்
கட்டுரையின் முன்னுரைப் பத்தியில் குறிப்பிட்டபடி, சமயம் சார்ந்த பார்வையில் மேற்கொண்டு அலசுவோம். அருணகிரிநாதர் என்ற சந்தப்பா கவிஞர் ஒருவர் 15-ம் நூற்றாண்டில் தமிழகப் பகுதியில் வசித்து வந்தார்.
உண்மையில் இவர் எழுதிய சந்தப் பாடலுக்கு ஈடு இணையே இல்லை. இவர்தம் பாடலுக்கு தனித்த இடம் உண்டு. ஆனால் சிக்கல் எங்கே எழுகிறது? கிறிஸ்தவம் – இஸ்லாம் உட்பட்ட உலக மதங்கள் எல்லாம் தங்கள் கடவுளரின் திருமேனி காண்டலை ஒரு காலத்திற்குப் பின் பேசவேயில்லை. பகுத்தறிவும் – நாத்திகமும் வளர்ந்து வந்த காலச் சூழலை அறிந்துகொண்டு நுட்பமாக மடைமாறியது.
இங்குதான் ஹிந்து மதம் சறுக்கியது. அருணகிரி என்ற மானுடர் பரத்தையர் வயப்பட்டு, உள்ள பொருளெல்லாம் இழந்த பின்னும் வேசியர்பால் சென்று ஈன்ற பொருளெல்லாம் இழந்தாராம். பின்னர் வறுமையும் பொல்லாப் பிணியும் (எய்ட்ஸ்) இவரை வாட்டியெடுக்க, வாழ்வை வெறுத்து திருவண்ணாமலை பெரிய கோபுரத்து வடக்கு வாயிலில் தவநிலையில் அமர்ந்து பலநாள் தவங் கிடந்தாராம். ஆனால் அப்போதும் மூவாசைகளும் நீர்ப்பாசிபோல விலகுவதும் பின் கூடுவதுமாக இருந்ததால் ‘என்னே! இம்மாயையின் வன்மை!’ எனப் பிரமித்து திருக்கோயிலின் கோபுரத்திலேறித் தம் உயரை மாய்க்கக் குதித்தாராம்.
அங்ஙனம் தோன்றிய சிவகுமாரர் ஆறுமுகக் கடவுள் திருமுருகப் பெருமான், ‘முடிய வழிவழியடிமை’ எனக் கூறி தமது அன்பருக்கு யாதொரு ஊறும் நேராதபடி அவரைத் தனது திருக்கரத்தால் பிடித்துத் தாங்கி, ‘அஞ்சற்க’ என அபயம் அளித்து மண்மிசை நிறுத்தினாராம். மேலும் மயில்மிசை ஏறி தன் நடன கோலத்தைக் காட்டி அருளினாராம். மேலும் திருமூலருக்கு ‘நாதன்’ எனும் பட்டத்தை தன் தந்தையார் வழங்கியதைப் போல, அருணகிரிக்கு சிவமைந்தனான முருகப்பிரான் ‘நாதன்’ பட்டம் வழங்கினாராம். அருணகிரி – அருணகிரிநாதர் ஆனாராம்.
மேலும் வேல்கொண்டு அருணகிரியார் நாவில் தமது ஆறெழுத்தைப் பொறித்து அவரது வினையை ஒட்டி முத்தமிழை ஊட்டினாராம். தமது தந்தையார் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு “அருச்சனை பாட்டே யாகும்” எனக் கூறியது போல முருகவேளும் அருணகிரியாரை நோக்கி ‘நமது பாதமலரைப் பாடுக’ என்றாராம். எங்ஙனம் யான் பாடுவேன் என்றபோது, “முத்தைத்தரு பத்தித் திருநகை” என அடியெடுத்துக் கொடுத்து மறைந்தாராம்.
அடடே.. எத்தனை தெய்வீகமான கதை இது. சரி ஒரு நிமிஷம் இருங்க. இதே 15-ம் நூற்றாண்டின் இறுதியில் தானே பாபர் படையெடுப்பும் நிகழ்ந்தது. பன்னெடுங்காலமாய் பெரும் பெரும் அமைதியின்மை ஏற்படுத்திவரும் பாபர் மசூதியும் இக்காலத்தில் புகைவிட தொடங்கியது தானே?
திருமால் பராசக்தியின் சகோதரன் என்ற உறவின் முறையில் பார்த்தால், உமையின் பாலன் முருகனுக்குத் தாய்மாமன். மாமன் மாலவனுக்கும் – மருமகன் வேலனுக்கும் எத்தகைய உறவு இருந்திருக்கும்! ஆனால் அப்போதுங்கூட தம்மை துதிபாட வந்த ஒருவருக்கு காட்சியளித்த மருமகன், தன் மாமனின் துயர் களைய வரவில்லையோ என கேள்வி கேட்க முற்படுகிறோம்.
பொற்காலங்களை புரிந்துகொள்ளுதல்
பொற்காலம் என்பது ஒரு மாயை. ஒவ்வொருவரும் வெவ்வேறு நடிகரை விரும்புவது போல; வெவ்வேறு ஐஸ்கிரீமை சுவைப்பது போல பொற்காலமும் மாறுபாட்டுக்கு உரியது. பொதுமையில் வைத்துப் பேசுவது மிகுந்த அபத்தத்திற்கு ஆட்படும்.
முகாலயப் படையெடுப்பின் பின்னர்தான் இந்தியா இந்நிலைமைக்கு உள்ளானது; வந்தேறிகளே வர்ணாசிரமத்தை உட்புகுத்தினர்; ஆங்கிலேய ஆட்சியால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்தது என வெறுமனே விரல் நீட்டுவதற்கு முன்னால் ‘அதற்கு முன்’ என்றொரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். 1940-களில் ஏற்பட்ட வங்கப் பஞ்சத்தை விட மிகக் கொடுமையான விவசாயப் போராட்டங்கள் 14-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை புலப்படும்!
இனி
“ எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்பதை கடைந்தெடுத்த மந்திரமாக்குவோம்!
ஆதார நூல்கள்
-
அருணகிரிநாதர் வரலாறும் நூல் ஆராய்ச்சியும் – தணிகைமணி வ.சு.சே.
-
வந்தார்கள் வென்றார்கள் – மதன்.
-
யூதர்கள் : வரலாறும் வாழ்க்கையும் – முகில்.
-
Noboru Karashima – A concise history of south india.
-
S.K. Singh – History of Medieval India.
-
K.A. Nilakanta Shastri – A history of south india.