பௌத்த சமயத்தில் பெண்கள் தீட்கை பெற முடியாது | பௌத்தத்தின்பால் பெண்களாகப் பிறந்ததால் மறு ஜென்மம் வரை காத்திருந்து ஆணாகப் பிறந்த பின்னரே துறவற நிலை அடைய முடியும் | பெண்களின் மேல் புத்தருக்கு அப்படி என்ன பொல்லாப்பு?
பௌத்த சமயம் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை. இந்தியாவின் தத்துவ ஞான மரபில் இந்த அளவே பௌத்தம் பேசப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுள் பாதியே உண்மை.
துப்புரவு பணிப்பெண்ணான சுனிதாவின் சமயமாற்றம் – புறக்கணித்த பிரிவின்கண் சோபகா, சூப்பியாவின் சமயமாற்றம் – உரிமை மறுக்கப்பட்ட வகுப்பாருள் சுமங்கலாவின் சமய மாற்றம் – குஷ்டரோகி சுப்ரத்தாவின் சமய மாற்றம் போன்றவைகள் குற்றம் சாட்டுவோர் வாசிக்க வேண்டும். புத்தர் தாமே உவந்து இக்குறிப்பிட்டோருக்கு போதனை வழங்கி சமய மாற்றம் செய்வித்துள்ளார். பௌத்தத்தின் பால் பிக்குணியாக சென்ற ராஜராஜன் சோழனின் மகள் மாதேவடிகளையும் உற்று நோக்க வேண்டும்.
அப்போ புத்தர் பெண்களுக்கு ஏதொரு தடையும் விதிக்க வில்லையா? இல்லை. ஆரம்பத்தில் பெண்கள் பௌத்தத்தின் பால் பரிவ்ராஜகம் மேற்கொள்ள சிக்கல் இருந்தது.
அது பற்றியான விவாதம் ஒன்று புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலில் இடம்பெறுகிறது.
சாக்கியப் பெண்களின் தலைவியாய் இருந்தவர் மஹாபிரஜாபதி கோதமி என்பவர். புத்தரின் போதனைமீது கொண்ட ஈர்ப்பால், பெண்கள் பலரோடு கூடிவந்து, “ அய்யன்மீர்! பெண்கள் பரிவ்ராஜகர்களாவதற்கு (துறவி) அனுமதிக்கப்பட்டு, ததாகதரால் போதிக்கப்படும் கொள்கை, நடைமுறை ஆகியவற்றின் கீழ் பௌத்த சங்கத்தில் இணைவார்களாயின் நல்லது” என்று புத்தரிடம் வேண்டினார்.
அதற்கு புத்தர், “போதும். ஓ! கோதமி! இது போன்ற எண்ணங்கள் தங்கள் மனத்தில் எழவிட வேண்டாம்” என்று மறுத்துவிட்டார். கோதமியும் விட்டபாடில்லை. இரண்டு முறை கேட்டார். மூன்று முறை கேட்டார். புத்தரை பின்தொடர்ந்தே அவர் சென்றவிடமெல்லாம் நின்று நின்று மன்றாடிக் கேட்டார். புத்தர் மசியவில்லை.
அப்போது ஒருமுறை மஹாபிரஜாபதி கோதமி தம் முடியை வெட்டியெறிந்து விட்டு, ஆரஞ்சு நிற அங்கியணிந்து சாக்கிய வம்ச பெண்கள் பலருடன், அப்போது வைசாலியில் மகாவனத்திலுள்ள கூடாகாரபவனில் தங்கியிருந்த புத்தரை சந்திக்கப் பயணம் மேற்கொண்டார்.
தம் வீங்கிய கால்களோடு, புழுதி படிந்தவராக கூடாகார பவனுக்கு வந்தவர், புத்தரை நோக்கி மீண்டுமதே கேள்வியை எழுப்பினார். புத்தர் மீண்டும் மறுத்துவிட்டார்.
மீண்டும் அவர் மறுப்பை பெற்ற மஹாபிரஜாபதி, வாயிலுக்கு வெளியே யாது செய்வதென அறியாமல் நின்றிருந்தார். அவர் அவ்வாறு நிற்பதை, ஆனந்தர் அடையாளங் கண்டு காரணம் வினவினார். நடந்ததை அறிந்ததும் புத்தரிடம் பேசச் சென்றார். (யான் அறிந்தவரை தம்மத்தில் மிக முக்கியமான பாடமாக இது கருதத் தக்கது).
ஆனந்தர் : அய்யன்மீர்! மஹாபிரஜாபதி வெளியே வாயில் மண்டபத்தில், வீங்கிய கால்களுடன், புழுதி படிந்து, வருத்தத்தோடும் வேதனையோடும், அழுதபடி, கண்ணீர்மல்க நிற்பதைக் காணுங்கள் – ஏனெனில் உயர்வெய்திய புத்தர், அவர்களை, தம் இல்லம் துறந்து, துறவறம் ஏற்று, உயர்வெய்திய புத்தரால் போதிக்கப்பட்ட கொள்கைகளையும், நடைமுறைகளையும் ஏற்க அனுமதிக்கப்படவில்லை ஆதலால். அய்யன்மீர்! பெண்கள் தாம் விரும்பும்படி செயல்பட அனுமதி அளிக்கப்படுவது நல்லதன்றோ.”
“மகா பிரஜாபதி அவர்கள் உயர்வெத்திய புத்தருக்கு பெரும் உதவி புரிந்தவர்கள் என தம்மை நிரூபித்தவர்கள் அல்லவா – அவருடைய அன்னை இறந்த பின் அவருக்குத் தம் மார்பகங்களிலேயே பால் ஊட்டியவர் அல்லவா – பேரன்னையாய் செவிலித்தாயாய் இருந்த போது உயர்வெய்திய புத்தரை பாலூட்டி வளர்த்தவர் அல்லவா . எனவே அய்யன்மீர்! ததாகர் பிரகடனப்படுத்துகிற கொள்கை, நடைமுறை ஆகியவற்றின் கீழ், இல்லற வாழ்விலிருந்து துறவற வாழ்வுக்கு மாறிச் செல்ல இந்தப் பெண்டிர்க்கு அனுமதி அளிப்பதே நல்லது.
புத்தர் : “ போதும் ஆனந்தரே! தயவுசெய்து பெண்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட வேண்டாம்” (இரண்டு மூன்று முறை ஆனந்தர் அதே வேண்டுகோளை – அதே சொற்களில் விடுத்து அதே பதிலை பெற்றார்)
ஆனந்தர் : “அய்யன்மீர்! பெண்கள் பரிவ்ராஜம் ஏற்பதை தாங்கள் மறுப்பதற்கு அடிப்படையாய் இருப்பது எது? சூத்திரர்களும் பெண்களும் மோட்சம் அடைய முடியாது ஏனெனில் அவர்கள் தூய்மை அற்றவர்கள் தாழ்வானவர்கள் என பிராமணர்கள் கருதுவதை ஐயன்மீர் நன்கு அறிவீர்கள். எனவே அவர்கள் சூத்திரர்களையும் பெண்களையும் பரிவ்ராஜம் ஏற்க அனுமதிப்பதில்லை. பிராமணர்கள் போல் அதே கருத்துடையவராய் உள்ளாரா, உயர்வெய்திய புத்தர்?”
“உயர்வெதிய புத்தர் பிராமணர்களுக்கு செய்வது போலவே, சூத்திரர்களையும் பரிவ்ராஜம் ஏற்கவும் சங்கத்தில் சேரவும் அனுமதி அளிக்கிறீர்கள் அல்லவா? அய்யன்மீர்! பெண்களை வேறுபாடாய் நடத்த அடிப்படை காரணம் யாது?. உயர்வெய்திய புத்தரால் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றின் கீழ் நிப்பானம் (நிர்வாணம்) அடைய பெண்களுக்கு ஆற்றல் இல்லை என உயர்வு இதை புத்தர் கருதுகிறீர்களா”
புத்தர் : “ஆனந்தா! என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்! நிப்பானம் அடைவதில் பெண்களுக்கு, ஆண்களுக்கு உள்ளது போன்றே ஆற்றல் உண்டு என்று நான் கருதுகிறேன். இந்த சிக்கல் பால்வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டதல்ல – அது நடைமுறையை அடிப்படையாகக் கொண்டது.”
ஆண்கள் போல முற்றும் துறந்தவர்களாக நிர்வாண கதியெய்த பெண்களுக்கு சர்வ சக்தியும் இருக்கிறது. ஆனால் அதை சகித்துக் கொள்ள பெண்களுக்கு இருப்பதைப் போன்ற மனத்திட்பம் ஆண்களுக்கு இல்லை. உடலமைப்பின்படி பார்த்தால் பெண்கள் ஆண்களைவிட வலிமை குன்றியிருப்பது மேலுமிதை நடைமுறைப்படுத்தும் சிக்கல் வலுக்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட ஆணொருவர் கிழிந்த உடையோடு சாலையோரத்தில் தன் அங்கம் தெரியும்படி படுத்திருத்தலில் பயம் இல்லை. அதே நிலையில் பெண்ணொருவர் படித்திருப்பதில்தான் கற்பு, காவல், பாலியல் அத்துமீறலென சர்வமும் இருக்கிறது.
தான் ஒரு ஆண் என்பதாலேயே ஆணின் பார்வையிலேயே புத்தரின் ஞான மார்க்கம் அமைந்தது வியப்பல்ல. சரியான பாதையில் தான் பயனிப்பதாக உணர்ந்த புத்தருக்கு முதல் பிசகல் பெண்களின் பரிவ்ராஜம் பற்றி பேசுகையில்தான் எழுந்தது. ஆனாலதை அப்படியே புத்தர் விட்டுவிட வில்லை.
ஆனந்தர் : “ அய்யன்மீர்! உண்மை காரணத்தை அறிந்து நான் மகிழ்கிறேன். நடைமுறை சிக்கல்கள் காரணமாக அவருடைய வேண்டுகோளை மறுக்கத்தான் வேண்டுமா? இத்தகைய நடவடிக்கை தர்மத்திற்கு இகழ்வையேற்படுத்தி, அது பால்வேறுபாட்டை கருதுகின்றது என குற்றம்சாட்டப் படுவதற்கு இடமளித்து விடாதா? புத்தர் கவலையுறும் அத்தகைய நடைமுறை சிக்கல்களை வெல்ல தக்கவாறு சில விதிமுறைகளை கண்டளிக்கலாகாதா அய்யன்மீர்?”
(சிறிது யோசனைக்குப் பிறகு)
புத்தர் : “நல்லது ஆனந்தரே! பெண்கள் என்னால் பிரகடனப் படுத்தப் படும் கொள்கைகள், நடைமுறைகளின் கீழ் பரிவ்ராஜம் ஏற்க அனுமதிக்கப்பட வேண்டும் என மகாபிரஜாபதி வற்புறுத்துவார்களாயின் அதற்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன். எட்டுத் தலையாய விதிகளை செயற்படுத்தும் பொறுப்பை மஹாபிரஜாபதி கோதமியவர்கள் தமக்குத்தாமே ஏற்றுக் கொள்வாராக. அதுவே அவர்களுடைய உள்நுழைவாகும்.” என்று இறுதியில் புத்தர் தலை அசைக்கிறார்.
பௌத்தம் – சமூக எண்ணவோட்டத்தில் மலர்ந்த சமயம். அதனால்தான் சாதாரண மனிதனால் தொடங்கப்பட்டாலும் – சர்வ உலகமும் சென்றடைந்தது. தன் முன் ஒரு பெண் நிர்வாணமாக நின்றாலும் சற்றும் சஞ்சலப்பட மாட்டேன் என்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு பல்வேறு பெண்களுடன் கூடிக் களித்த அந்தக் காலத்து வைதீக சமயவாதிகள் போலல்லாமல் – சமூகத்துடன் ஒன்றிப் பார்த்தார்.
நான் ஒருவன் புத்தனாய் இருந்தால் போதுமா? – இந்த சமூகம் புத்தனாகத வரை பெண்கள் நிர்வாணம் அடைவதால் ஆணக்குத்தான் இலாபமென அத்தனை துல்லியமாய் கணக்கிட்டார். அதற்கென்று பௌத்த மார்க்கத்தையும் சற்றே மாற்றிக்கொண்டார். மஹா பிரஜாபதி அழைத்துவந்த பெண்கூட்டத்தாருள், புத்தரின் மனைவி யசோதராவும் அடக்கம். சங்கமுறைமை ஏற்புக்குப் பின் அவர் பத்தா கச்சானா என அறியப்பட்டார்.
இத்தனையும் கடந்ததால்தான் அவர் புத்தர்.