ஓராயிரம் சுக-துக்கங்களை சுமந்தபடி செல்கிறது, ஒரு பேருந்து. ஆஹா! அதன் வருகையில்தான் எத்தனைப்பேரின் காத்திருப்பு பூர்த்தியாகிறது; அதன் இருப்பில் எத்தனைப்பேரின் இருமாப்பு இடம்பெயர்கிறது. பேருந்து. பெயருக்கு ஏற்றபடி பல பேரின் உந்துதலால் செல்லும் நகரும் நடனம் அது; ஓடும் ஓய்வறை; பாடும் பறவை; களிக்கும் காதலி!
ஒரு பேருந்துப் பயணம் நம்மை என்னவெல்லாம் செய்கிறது? விரக்தியுடன் கிளம்பும் ஒரு மனிதனை மெல்ல மெல்ல சாந்தப்படுத்துகிறது. உத்வேகமான பாடல்களால், நேர்முகத்தேர்வில் தோற்ற ஒருவனை மேலும் பயணிக்கத் தெம்பூட்டுகிறது. புதுப்புது முகங்களை அறிமுகம் செய்கிறது. பல நமட்டு உரையாடல்களை, திருட்டுத்தனமாய் கேட்கவைக்கிறது. குடிபோதை அட்டூழியத்தை வேறு வழியில்லாமல் சகிக்க வைக்கிறது. ஜன்னலோர காற்றாலையால் வகுடெடுத்த தலைமயிரை சிலுப்பி விடுகிறது. சில்லறைத் தராத கண்டெட்டர்களை சிலசமயம் முன்கோபிக்க வைக்கிறது. உட்கார்ந்த மாத்திரத்திலேயே பல அழகுப் பெண்களை வரிசைக்கட்டி கண்முன் நிறுத்துகிறது!
இத்தகையப் பேருந்துள் நுழைவது என்பது அத்தனை இலகுவான வேலை அல்ல. எல்லா பேருந்துகளும் சந்தோஷத்தை தூக்கிவாரித் தந்துவிடாது. பஸ் ஸ்டேண்டில் தன்னந்தனியாய் நிற்கும் ஒரு பேருந்தை பார்த்து மோகம் வந்தால், நீங்கள் ஒதுங்கிக் கொள்ளலாம். திருட்டுக்கு இருட்டு எவ்வளவு முக்கியமோ – அவ்வளவு கூட்டம் பேருந்துக்கும் முக்கியம். முண்டியடித்து முன்சீட் பிடித்தால், ஒருகணம் நீங்கள் தொல்லியல் ஆய்வாளர் ஆகலாம்.
‘Karthi Luves Keerthana’ என்று எழுதப்பட்டிருக்கும் உங்கள் முன்சீட்டின் முதுகில் ‘ரோமியோ ஜூலியட்’ காவியமே அடக்கியிருக்கும். இந்நேரம் இந்தப் பெயரை உங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் முகம் கொண்டு மேட்ச் செய்து பார்க்க அடி மனதில் ஒரு அழுக்குத் திரவம் பூண்ட ஆசை எட்டிப்பார்க்கும். ஒருவேளை அது உங்கள் முன்னாள் காதலியின் பெயராக இருந்தால், காரணமின்றி கண்கள் பிசுபிசுக்கும். இந்த மூன்று வார்த்தைகள் நம்மை படுத்தும் பாடு – பயணம் நெடுக இம்சிக்கும்.
காதல் உற்ற செய்தியை கல்வெட்டாய் பதிவு செய்ய, காலங் காலமாய் காதலர்கள் எத்தனிக்கிறார்கள். சங்க இலக்கியத்தின் மடலேறுதலில் தொடங்கிய இவ்வைபவம் நவீன காலத்தில் வரலாற்று பெருஞ்சின்னங்களில் பெயர் பொறிப்பதில் வந்து நிற்கிறது. 2020-ல் விகடனில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் கபிலர் குன்று பாழ்பட்டு கிடந்த நிலையை குறிப்பிட்டிருந்தேன்.
சரி மீண்டும் பேருந்துக்கு வருவோம். முன் சீட்டின் முதுகை வருடிக் கொடுத்தபடி இலயத்துப் படுங்கள். தூக்கம் வராது.
‘முன்பே வா.. என் அன்பே வா’ என்றொரு காலர் டியூன் உங்கள் காதில் விஷேசமாய் ஒலிக்கும். ஆம். அது உங்கள் முன்னாள் காதலியின் அதே காலர் டியூன். கால் செய்தவரை திரும்பி பார்ப்பீர்கள். அடையாளம் தெரியாது. ஆனாலும் கோபம் வரும். மனம் தனிமையில் சல்லாபிக்கும்.
தனித்துவிடப்பட்ட மனித மனம் Uranium 235 – ஆல் ஆனது. சிறதளவு சோகம் நியூட்ரானாக வந்தாலும் சரி Uranium 236 – ஆக உருவெடுத்து மாபெரும் அழிவு சக்தியை புழுங்கி புழுங்கி வெளியேற்றும். அதன் வீரியம் கணக்கிட முடியாதது.
அப்போது நம் மனதை சாந்தப் படுத்த வருபவர்தான் சொர்க்க லோகத்தின் பார்ட் டைம் தேவதைகள். பேருந்து மாதிரியான ஒரு அமைப்பு இவ்வுலகில் வேறெங்கும் இல்லை என மார்தட்டி சொல்வதற்கு இவர்களே காரணம்.
பெயர் தெரியாது. ஊர் தெரியாது. முன் பின் அடையாளம் தெரியாத இத்தேவதைகள் வசந்த காலத்தையே கையோடு கொண்டுவருகிறார்கள். இவர்கள் எந்த நிறுத்தத்தில் ஏறுவார்கள் என யாருக்கும் தெரியாது. சிலநேரம் கண் மூடித் திறப்பதற்குள் சிறகடித்துவிடுவார்கள்.
அதிர்ஷ்டம் போர்த்தி அமர்ந்திருக்கும் போது, வசந்தம் மேவிய காற்று உங்கள் ஜன்னலைத் தீண்ட அனுமதி கேட்கும்.
நல்லவேளையாக ‘எருக்கஞ்செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா’ வகையறா பாடல்களை மூட்டைக்கட்டிய டிரைவர் யுவனின் பென்டிரைவை ஒலிக்க விட்டிருப்பார்.
தேவதையின் ஒருகை பேருந்தின் கம்பியைப் பிடித்தபடி, மற்றொரு கை காற்றில் அசையும் கூந்தலை வருடியபடி. சிலசமயம் தொட்டுப்பேசும் பாக்கியம் சில கணவான்களுக்கு வாய்ப்பது உண்டு. அமைதி காத்தால் காற்றில் அவர் ஷால் விழும். பொறுமை இழந்து சில்மிஷம் செய்ய முற்பட்டால் – செருப்பு விழும்.
பக்கத்து தேவதைகளை பக்குவமாய் பார்க்கவேண்டும். பயமிருந்தால் ஜன்னல் கண்ணாடியை உதவிக்கு அழைக்கலாம். வேடிக்கைப் பார்ப்பதாய் – கண்ணாடிவழி அவர்கள் பிம்பத்தை ரசிக்கலாம். அந்தரத்தை பார்த்தல் இங்கு மரபு மீறல்.
மனிதர்களுக்கு காதல் வந்தால் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் – பட்டாம்பூச்சிகளுக்கு காதல் வந்தால் அதன் வயிற்றில் மனிதர்கள் பறப்பார்களா என்ன? இல்லை. இது காதலும் இல்லை காமமும் இல்லை. மத்தியில் ஒன்று. மயக்கம் தரும் போதையும் அன்று.
பக்கத்து தேவதை அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடும்போது, தூரத்து தேவதையின் தரிசனம் வாய்க்கப்பெறுகிறோம். பெரும்பாலும் தூரத்து தேவதைகள் நம்மை திரும்பி பார்ப்பதில்லை – இல்லையெனில் நாம் திரும்பிப் பார்க்க இசைவு தருவதில்லை.
ஏழெட்டு இருக்கைத் தாண்டி கமுக்கமாய் உட்கார்ந்து கொண்டு, இடப்புறத்தில் தொடங்கி வலப்புறம் திரும்புவதாய் மின்னல் பார்வை ஒன்றில் தேவதையின் பாவனையை மனதில் பதியமிட்டு, பின் அதை கண்மூடி ரசிக்கும் மயக்கம் இந்த மண்ணுலகில் வேறெங்குக் கிட்டும்?
தேவதைகள் தேவைப்படுகிறார்கள். ஊர் தெரியாமல் – பெயர் தெரியாமல் – கண்களால் மருத்துவம் செய்து பல இன்னல்களை கொய்து எரிய, ஒவ்வொரு பயணத்திலும் சிலபத்து தேவதைகள் தேவைப்படுகிறார்கள்.
இந்த வசந்த காலத்தில் இருந்து நம் பயணத்தை முடித்துக் கொள்ள இன்னும் இரண்டு நிறுத்தங்களே பாக்கி. மனம் ஒருமையில் வாடும். மீண்டுமிந்த பொழுதை எண்ணி உரத்த ராகம் ஒன்றை பாடிவிடத் தோன்றும். இருக்கையை விட்டு எழுந்திருப்பீர்கள். மீண்டுமந்த சோக அலைவரிசை காற்றில் நம்மை வந்து சேரும். தேவதைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மங்கத் தொடங்குவார்கள்.
கூட்ட நெரிசலில் தட்டித் தடுமாறியபடி படிக்கட்டிற்குச் செல்வீர்கள். ஒரு தேவதையாது நம்மோடு இறங்குமா என்று ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பீர்கள். அதற்குள் நிறுத்தம் வந்துவிடும்.
பையை சரிசெய்துகொண்டு திரும்புகையில், “இஸ் தி ரெயில்வே ஸ்டேஷன் டூ ஃபார் ஃப்ரம் ஹியர்?” என கேட்பாள் ஒரு தேவதை.
அங்குத் தொடங்குகிறது ஒரு ஆணின் அவஸ்தை.