பளபளப்பான பங்குனி மாத உச்சிப் பொழுதில், ஒரு குவளை நீரை வெயிலில் வைத்து எடுத்தால் எத்தனை சூடாக இருக்கும்? அதைவிடப் பன்மடங்கு வெப்பத்துடன் கொதித்துக் கொண்டிருக்கின்றன பெருங்கடல்கள்.
பொதுவாகக் கோடைக் காலம் தொடங்கினாலே மலைப்பகுதிகள், நீர்நிலைப் பகுதிகளை நாடித்தான் பெரும்பாலானோர் செல்கிறார்கள். ஆனால், வெப்பத்தைத் தணிப்பதற்காக அவர்கள் செல்லும் நீர்நிலைப் பகுதிகள், நிலப்பகுதிகளைவிட ஏராளமான வெப்பத்தைத் தன்னுள் உறிஞ்சி வைத்திருக்கின்றன.
இதைப் புரிந்துகொள்ள நாம் பசுமை இல்ல வாயுக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பமான கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. அத்தகைய கதிர்களின் ஒரு பகுதி பூமியின் நிலப்பரப்பை அடையும் முன்பே வளிமண்டலத்தில் கரைந்து விடும். அதில் தப்பி வரும் கதிர்களைப் பூமியின் மேற்பரப்பு பிரதிபலித்து மீண்டும் வளிமண்டலத்திற்கே அனுப்பி விடும்.
அதில் எஞ்சியுள்ள கதிர்களே பூமியின் மேற்பரப்பில் வெப்பத்தைப் பரப்புகின்றன. குவளைத் தண்ணீர் சூடாவதும், துவைத்த துணிகள் உலர்ந்து போவதும், வெறும் மண் – பாலைவன மண்ணாகக் கொதித்துப் போவதும் இந்த எஞ்சியுள்ள கதிர்களால்தான்.
நிலப்பரப்பில் 2.1% ஆகவும் உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகளில் 2.1% ஆகவும் அதிகரித்துவிட்டதால் அனைத்தும் கொதித்துக் கொண்டிருக்கின்றன.
எஞ்சிய 93.4% வெப்பத்தையும் பூமியின் 70.9% பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் பெருங்கடல்கள்தான் உறிஞ்சி வைத்திருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்நேரமும் உலைக்கூட்டி வைத்த அடுப்பாகப் பெருங்கடலில் வாழும் உயிரினங்கள் கொதித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில், ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. ராக்ஷி மேத்யூ கொல் (Roxy Mathew Koll), அஞ்சல் பிரகாஷ் (Anjal Prakash) ஆகிய இந்தியர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கட்டுரையை அரசுகளுக்கு இடையேயான பருவநிலை மாற்றக் குழு (IPCC) வெளியிட்டது.
பத்தாண்டுக்கு 52 கிலோமீட்டர் என்றால், 1950 முதல் 2019 வரை எவ்வளவு தூரம் அவை துருவம் நோக்கி நகர்ந்திருக்கும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். நிலைமை இவ்வாறு இருக்கையில், கடலின் தரை மட்டத்தில் வாழும் உயிரினங்களும் மேற்குறிப்பிட்ட அதே பத்தாண்டு இடைவெளியில் 2030 கி.மீ தூரம் பெயர்ந்துள்ளன.
இதற்கான காரணத்தைப் பின்வருமாறு வரையறுக்கலாம். 1970-களில் இருந்து, சுற்றுப்புறத்தில் உள்ள அதீத வெப்பத்தை 90% முழுவதுமாகப் பெருங்கடல்கள் உறிஞ்சிவருகின்றன. இதனால் 1993 காலகட்டத்திலிருந்து கடல் வெப்பமயமாதல் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 1982-ம் ஆண்டிலிருந்து வெப்ப அலைகளின் அதிர்வெண்களும் இருமடங்கு உயர்ந்துள்ளன. இதனால் கடலின் தரைப்பகுதியைக்கூட வெப்பம் அதிகமாகத் தாக்கியுள்ளது.
இதன் கோரமுகம் புரிவதற்கு மேலும் ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். எல்விரா பொலோக்சன்ஸ்கா (Elvira Poloczanska) என்ற ஆஸ்திரேலிய ஆய்வாளர் 2013-ல், தான் ஆய்ந்த கடல் உயிரிகளுள் 82% உயிரினங்கள் துருவங்களை நோக்கி நகர்வதை உறுதி செய்துள்ளார். நீர்நிலைகளில் வாழும் நுண்ணுயிரியான மிதவைவாழிகள் (Zooplanktons) கூட துருவத்தை நோக்கி நடைபோடுவதாக லுகாஸ் ஜான்ங்கர்ஸ் (Lucas Jonkers) என்ற ஆய்வாளரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உறுதி செய்கிறது.
சில இடங்களில், வெப்பம் தாளாமல் இவை கடலின் தரைப்பகுதியை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. 2008-ம் ஆண்டு இதை உறுதிப்படுத்தும் விதமாக நிக்கோலஸ் கே. துல்வி (Nicholas K.Dulvy) தலைமையிலான ஆய்வு, வடக்கு கடல் பகுதி (North Sea) கடந்த 25 வருடங்களாகப் பத்தாண்டுக்கு ஒருமுறை கடல்வாழ் உயிரிகளின், உயிர்வாழும் சூழலை 3.6 மீட்டர் ஆழப்படுத்தி வருவதாகக் குறிப்பிடுகிறார்.
இந்த அபாயங்களுக்குக் கடல்வாழ் உயிரிகளின் புதுப்புது வாழ்வியல் மாற்றங்களும், கடலில் கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைவதும், அமிலமயமாக்க விளைவுகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மனிதர்கள் உட்படப் பூமியின் அனைத்து உயிரினங்களுமே பிணைக்கப்பட்ட வாழ்வியலைக் கொண்டுள்ளன. நாம் சூழலியல் அக்கறையின்றிச் செய்த செயல்களால், கடலில் ஏற்பட்ட இந்த மாற்றம் மனித இனத்திற்கும் பலத்த அபாயங்களைப் பரிசளிக்கக் காத்திருக்கிறது. நாமும்கூட இதுபோல், பூமிச்சட்டியில் வறுபடும் காலம் வெகு தொலைவில் இல்லை!