ஆயிரமா லட்சமா என்று கணக்குத் தெரியாத மின் புத்தகங்கள் தமிழிணையம் மின்னூலகத்தில் இலவசமாக கிடைக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்திற்கு ஏற்ற Tag மற்றும் Labelகளை சரியாக பயன்படுத்துவதால், கூகுள் தேடி பொறியில் பெயர் சொடுக்கி தேடினால் புத்தகக் கோப்பு கைமேல் வந்து விழும்.
ஆனால் அரிய புத்தகங்களும், இதழ்களும் சேகரம் செய்துள்ள இந்நூலகத்தில் நாமாக ஒரு விஷேச நூலை தேர்ந்தெடுக்கலாம் என்று புகுந்தால் அது ஆகாத காரியம். Rare Book Society of India எனும் தளத்தில் உள்ளதுபோல் நூற்களை thematic ஆக இவர்கள் வரிசைப்படுத்தவில்லை. அரிய நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், பாடநூல் கழக நூல்கள், பருவ இதழ்கள், சுவடிகள், அரசு ஆவணங்கள் போன்ற வகைக்குள் எல்லா நூற்களையும் சொருகி வைத்து விட்டார்கள்.
ஆக நூலின் பெயர் தெரிந்தாலோ, நூலசிரியரின் பெயர் தெரிந்தாலோ மட்டுந்தான் இந்தத் தளத்தில மேம்பட்ட உதவியைப் பெறமுடியும். சான்றாக காலனித்துவ கால இலக்கியங்கள் பற்றி நீங்கள் ஒரு நூல் தேட விரும்பினால் அதற்கு அந்நூலின் பெயரோ, நூலாசிரியன் பெயரோ நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அதாவது உங்களுக்கு முன்னரே தெரிந்த ஒரு நூலை மட்டுந்தான் (அந்நூல் தளத்தில் இருந்தால்) நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
RBSI போன்ற தளத்தில் தீம் அடிப்படையில் பலவாறாகப் பிரித்துப்போட்டிருப்பார்கள். ஆகவே குறிப்பிட்ட வகைமைக்குள் என்னென்ன நூல்கள் அங்கு கிடைக்கின்றன என்பது பற்றி மேலோட்டமான பார்வை கிடைக்கும். அதைக்காட்டிலும் பன்மடங்கு எண்ணிக்கையில் நூற்கள் கொண்டுள்ள Tamil VU-ல் இந்த வசதி இல்லை.
ஆனால் சில நாட்களாகவே அதை ஈடுசெய்யும் வகையில் Tamil VU தளத்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ‘இன்று ஒரு புத்தகம்’ என்ற பெயரில் தினந்தோறும் ஒரு புத்தகப் பரிந்துரை போஸ்ட் பதிவேற்றுகிறார்கள். அதில் நூலின் படம், நூலாசிரியன் குறிப்போடு நூல் பற்றிய நச்சென்ற வசனமும் இடம்பெறுகிறது. கூடவே நூலுக்கான இணைப்பை QR வடிவில் சேர்த்திருக்கிறார்கள்.
அவர்கள் இடுகையின் மூலம் சமீபத்தில் நான் பார்த்து வியந்த சில நூற்களின் படங்களை பதிவுசெய்கிறேன். சி.சு. செல்லப்பா நடத்திவந்த ‘எழுத்து’ எனும் இலக்கிய சஞ்சிகையின் 31வது இதழை அறிமுகப்படுத்துமிடத்தில் ஃப்ரான்ஸ் காஃப்காவின் சிறுகதையொன்று அந்தக் காலத்திலேயே மொழிபெயர்ப்பாகி தமிழ்ப்படுத்தப்பட்ட செய்தியை அறிகிறேன். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நடன. காசிநாதனின் தமிழர் காசு இயல் எனும் ஆய்வு நூலை அறிமுகம் செய்யும் போது, ‘காசு மேல காசு வந்து’ என்று கலோக்கியலாக எழுதி கவனம் ஈர்ப்பது பிரமாதம். ஆயிரக்கணக்கான நூல்களையும் மின்பெட்டிக்குள் வைத்துக்கொண்டு ஏதுசெய்வதென்று அறியாமல் தவித்துக்கொண்டிருந்த tamilvuவிடம் இருந்து இதுவொரு நல்ல முன்னெடுப்பு.
ஆனால் இந்தப் பதிவுகளுக்கு எல்லாம் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே லைக் வருகிறது. அவர்கள் சோர்வடைந்து இந்தப் பதிவுகளையேனும் நிறுத்திவிடாமல் இருக்க, நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறேன். பயன்படுத்திக் கொள்வோம்!