கோவை மத்திய ரயில் நிலையத்தை தினமும் குறைந்தபட்சம் 50,000 பேர் கடந்து செல்கின்றனர். இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகளும் அடக்கம். மாற்றுத் திறனாளிகளின் வசதிக்கேற்ப பல திட்டங்களை தென்னக ரயில்வே அவ்வப்போது செய்து வருகிறது. 2015ல் மைசூரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி முறையிலான அறிவிப்புப் பலகை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை அனுப்பிரயாஸ் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தென்-மேற்கு ரயில்வே மண்டலம் செயல்படுத்தியது. மைசூரை அடுத்து பெங்களூரிலும், மும்பையிலும் சில ரயில்நிலையங்களில் இந்த வசதி உருவாக்கப்பட்டது.
தற்போது தென்னக ரயில்வேயும் இந்த திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி, சேலம் மண்டல ரயில்வே மேலாளர் சுப்பாராவ் கோவை ரயில்நிலையத்திற்கு பிரெய்லி அறிவிப்புப் பலகைகளை வழங்கினார். இதன் மூலம் தெற்கு மண்டலத்திலேயே பிரெய்லி அறிவிப்புப் பலகைகள் கொண்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இனி பார்வைச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிறர் தயவின்றி இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்த முடியும்.
சுமார் 5 லட்சம் செலவில், ரயில்நிலையம் முழுவதும் 250 இடங்களில் இரும்புத் தகட்டில் பிரெய்லி மொழியில் பொறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்வாசலிலும் பின்வாசலிலும் ரயில்நிலையத்தின் மாஸ்டர் மேப் வைத்துள்ளனர். இத்துடன், ‘சரியான வழியில்தான் செல்கிறோமா’, ‘எந்த நடைமேடையில் நிற்கிறோம்’ என்பதையெல்லாம் அறிய படிக்கட்டின் இருமுனைகளிலும் பிரெய்லி வழிகாட்டி பொறிக்கப்பட்டுள்ளது. கழிவறை, குடிநீர் குழாய்களிலும் பிரெய்லி பலகைகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து பேசிய கோவை ரயில்நிலைய இயக்குநர் சதீஷ் சரவணன், “தென்னக ரயில்வேயில் முதல்முறையாக பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெற ஏதுவாக பிரெய்லி எழுத்து வடிவம் கொண்ட நிலைய வரைபடம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி பார்வையற்றோரின் சிரமங்களைக் குறைக்கும்” என்றார்.
இதுகுறித்து தேசிய பார்வைற்றோர் கூட்டமைப்பைச் சார்ந்த சதாசிவம் கூறுகையில், “இத்திட்டம் எங்களுக்கு மிகவும் பயனளிக்கும். ஆனால் பிரெய்லி எழுத்துக்கள் எல்லாம் ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளன. வடமாநிலத்தைச் சார்ந்த பலரும் இங்கு வருகின்றனர். எனவே ஆங்கிலத்தோடு தமிழையும், இந்தியையும் சேர்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்துடன் அட்டவணைப்படி வரும் ரயிலின் நேரங்களையும் குறிப்பிட்டிருந்தால், மிகவும் வசதியாக இருந்திருக்கும். இதைப் பின்பற்றி தமிழ்நாட்டில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் பிரெய்லி பலகைகள் வைக்கப்பட வேண்டும்” என்றார்.
விழித்திறன் குறைபாடுடையவர்களின் பயணம் இனி சிறப்பாக அமையட்டும்.