சைகையும் சித்திரமுமே ஆதிமொழி. அவற்றின் பரிணாமங்களே பேச்சும் எழுத்தும். கீழடி ஆய்வுகளில் பண்டைத் தமிழ் எழுத்துகளைக் கண்டெடுத்ததன் மூலம் தமிழ்த்தொன்மை விசாலமடைந்துள்ளது. எனினும், ஆதிச்சித்திரங்கள் குறித்த ஆய்வு விரிவடைந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும். காரணம், பாப்லோ பிக்காசோ, லியோனார்டோ டாவின்சி ஆகிய எல்லாமே சில நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியர்கள்தாம். ஆனால், நம் நாட்டில் காணப்படும் குகை ஓவியங்கள் பல ஆயிரமாண்டுப் பழைமை கொண்டவை. ஆனால், அவை குறித்த விழிப்புணர்வின்றி அவற்றை கரிபூசி அழிப்பது துரதிஷ்டவசமானது.
கோவை – பாலக்காட்டுக் கணவாய் இடையே அமைந்துள்ளது பதிமலை குன்று. ஆதிகாலத்தில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் வசித்த இடம் இந்தக் குன்று என்கிறார்கள். இங்கு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியும் தற்போது உள்ளது. பொறியியல் கல்லூரிக்குப் பின்னே மறைந்திருக்கிறது, பதிமலை. ஆளரவமற்ற அந்தச் சாலையில் பயத்துடன் மெல்ல நடந்து சென்ற நம்மை, சிற்றுயிர்களின் சத்தம் மேலும் அச்சுறுத்தியது. இருவர் மலையடிவாரத்தில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வழிகேட்டுக்கொண்டு நடந்தோம்.
அந்தப் பாதை, பாதுகாக்கப்படவேண்டிய புராதனச்சின்னத்தை நோக்கிச்சென்றது. புதர்களும் பூச்சிகளும் மண்டிக்கிடந்தது அந்த ஒற்றையடிப்பாதையில். அந்தப் பாதையின் முடிவில் இருந்தது அந்தக் குகை.
குகைக்குள் நுழையும் முன்பாகவே ‘ரங்கசாமி – தமயந்தி சுத்தியொரு ஆர்ட்டின்’ – என்று நம் முன்னோர், 1992-ம் ஆண்டுக்குறிப்போடு நமக்குச் சொல்லி வைத்த செய்தியை வாசித்துவிட்டு நாம் தேடிவந்த ஆதிகாலத்து ஓவியங்களைத் தேடினோம்.
யானை மேலே ஒருவன் அமர்ந்த ஓவியமும் தேர் போன்று ஓர் ஓவியமும் இருந்தன. அதைச் சுற்றி மேலும் பல சித்திரங்கள். இவ்வளவு பொக்கிஷமான ஓவியங்களைக் கொண்டிருக்கும் அந்த இடம் காண்பதற்கு ஒரு குப்பை மேடுபோலக் காணப்பட்டது. காலி மது பாட்டில்களாலும், புகையிலைப் பாக்கெட்டுகளாலும் நிரம்பி வழிந்தது. யாரோ அங்கு கற்கள் கூட்டி அடுப்பு வைத்து சமைத்திருக்கிறார்கள். அதனால் உண்டான கருமை குகை முழுவதும் பரவியுள்ளது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் மணிகண்டனிடம் பேசினோம். “இந்தப் பதிமலை குன்றில் காணப்படும் ஓவியங்கள் சுமார் 3500 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். இதன்மூலம் இப்பகுதியில் பன்னெடுங்காலமாகவே யானைகள் இருந்து வருகின்றன என்பதை அறிய முடிகிறது. ஆனால், முறையான பராமரிப்பின்றி, நம்மவர்களாலே இந்தப் புராதனச் சின்னங்கள் சிதைந்து வருகின்றன. பலர் இந்த ஓவியங்களின் மீது தங்கள் பெயரை எழுதியும் கிறுக்கியும் வருகின்றனர். எனவே அரசு இதை மீட்டெடுத்து முறையாகப் பராமரித்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், தொல்லியல் ஆய்வாளர் ஜெகதீசனை அணுகியபோது, “இருளர் இன மக்கள் வாழும் பகுதி இது. இந்த இடத்தின் பெயர் குமிட்டிப்பதி. `பதி’ என்றால் இருப்பிடம். `குமிட்டி’ என்ற தலைவனின் கீழ் இருந்ததால் ‘குமிட்டிப்பதி’ எனப் பெயர் பெற்றிருக்கலாம். இங்குள்ள பதிமலையில் காணப்படுபவை எழுத்து வடிவங்கள் அல்ல, சித்திரங்களே. எனவே, எழுத்து வடிவம் பிறக்கும் முன்பே, அதாவது சங்க காலத்திற்கும் முன்பு தோன்றியது என உறுதியாகக் கூறலாம். கருத்து வெளிப்படுத்த மட்டுமன்றி, அலங்கரிக்கவும் அந்தக் காலமக்கள் இதுபோன்ற ஓவியங்களை வரைந்தனர்.
பொதுவாக, குகை ஓவியம் இரண்டு வகை. வெள்ளை நிறத்திலும் செந்நிறத்திலும் காணப்படும். முன்னர் கூறப்பட்டது, செந்நிற வகையை விட இருநூறு – முந்நூறு ஆண்டுகள் பின் வந்தவை. குறிப்பாக இங்கு காணப்படும் ஓவியங்களில் யானை மீது தலைவன் நிற்பதும், மரம் மயில் ஒன்று தோகை விரித்து நிற்பதும் நன்றாகப் புலப்படும். சிலர் மயிலை, தேர் என்றும் கூறுவர். ஆனால், குறிஞ்சி நிலத்திற்கு உகந்த பறவை என்று பார்க்கையில் அது மயில்தான். குறைந்தபட்சம் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்ட இந்த ஓவியத்தை இன்று ஆய்வுக்கு உட்படுத்தினால் நம் வரலாற்றை மாற்றுப் பார்வையில் சிந்திக்க மேலும் வழிவகுக்கும்.”
பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வண்ணம் இந்தக் குகை ஓவியங்களை எவ்வாறு வரைந்திருப்பர் என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு, “அந்தக் காலத்தில் அசைவத்தில் மீந்த எலும்புத் துண்டைப் பொடியாக்கி, கொழுப்பைக் கூழாக்கி அதனுடன் கலந்து வரைந்திருப்பர். பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்ற ஓவியங்கள் நாகரிகமடைந்த இந்தக் காலத்தில் அழிந்துகொண்டிருக்கின்றன. இதை நாம்தான் மீட்க வேண்டும்” என்றார்.
மேலும் ஆய்வாளர் ஸ்டீபன் முடியரசிடம் பேசியபோது, “யானைகளை அடக்கும் ஓவியம், பெரிய மரத்தேரைப் பலர் இழுக்கும் ஓவியம், மரம் போன்ற ஓவியம், இனக் குழுவின் நடனம் மற்றும் பெரிய மரம் ஒன்றும் குகை ஓவியங்களாக உள்ளன. மர வழிபாட்டு முறையை விளக்கும் ஓவியமாகவும் இதைக் கருதலாம். தலைவனைச் சுற்றி சில மனிதர்கள் நிற்கிற ஓவியம் காணப்படுகிறது. அதில் தலைவனும் அவனுக்குக் கட்டுப்பட்ட வீரர்களும் காணப்படுகின்றனர். தலைவன் உருவம் சற்றுப் பெரியதாகவும் வீரர்களின் உருவம் சற்றுச் சிறியதாகவும் வரையப்படுவது பழங்காலக் குகை ஓவிய மரபு. ஊர் கூடித் தேர் ஓவியம் ஊரின் ஒற்றுமை மற்றும் தெய்வ வழிபாட்டுத் தொடக்கத்தை உணர்த்துவதாக உள்ளது. குழு நடன ஓவியத்தை, வழிபாட்டுக் கொண்டாட்டம் அல்லது வேட்டையாடிய பின்னர் உணவு பகிரும் கொண்டாட்டமாகக் கருதலாம். இந்த ஓவியங்கள் அனைத்தும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என்று கூறமுடியும்” என்றார்.
கிராமத்தாரிடையே இந்தக் குன்று பற்றிய பரவலான கதையொன்றும் இருந்து வருகின்றது. இதைப் பாண்டியன் மலை என்றும் சொல்வார்கள். அந்தக் காலத்தில் பாண்டியர்கள் போருக்குச் செல்லும் முன், தங்கள் போர் உத்தியை விவாதிக்க அந்தக் குகையைத்தான் பயன்படுத்தி வந்தனர் என்கின்றனர். இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வேலந்தாவளம் என்கிற ஊர் பதிமலை அருகில் இருக்கின்றது. வேழன் என்றால் யானை. தாவளம் என்றால் பெருவழி அல்லது இருப்பிடம் எனப் பொருள். வேழந்தாவளமே வேலந்தாவளமாக மருவியிருக்கும். எனவே யானைகள் மிகுந்த பகுதியாக இந்தப் பகுதி இருந்துள்ளது என்றனர்.
இத்தகைய பெருமைகளையுடைய குகை ஓவியங்களைப் பராமரிக்க வேண்டியது நம் கடமை. இவையே நம் இனத்தின் பழைமையின் ஆதாரங்களாக விளங்குவன. இவற்றை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டியது, அரசின் கடமை.