கடல் சூழ்ந்த ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது நியூ சௌத் வேல்ஸ் என்கிற மாகாணம். இந்தப் பகுதியின் தலைமை அமைச்சர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் (Gladys Berejiklian) தன் நாட்டு மக்களிடம், “நீங்கள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால், நியூ சௌத் வேல்ஸை விட்டு வெளியேறி விடுங்கள்” என்று எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கைக்குக் காரணம் இவரின் கொடுங்கோன்மை அல்ல; காட்டுத்தீ. இதுவரை 150 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் 40 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் 3 பேர் இறந்துவிட்டதாகவும் கணக்குக் கூறப்படுகிறது. மேலும் பல காட்டுயிர்களும் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளன. மொத்தம் 71 பகுதிகளில் இந்தக் காட்டுத்தீ பரவியுள்ளது. அதில் 11 பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீ, பத்துப் பகுதிகளில் ஓரளவு மிதமான அளவில் இருந்து வந்தாலும் 40 பகுதிகளில் அதன் ஆட்டத்தைக் கணக்கில் கொள்ளவே முடியவில்லை.
நேற்று மாலை இரண்டு பள்ளிகள் தீக்கிரையானதை அடுத்து இன்று 600 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 60 விமானங்களில் 3000-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் கிட்டத்தட்ட ஒரு படையே காட்டுத்தீயை அணைக்கவும் அதில் சிக்கியவர்களைக் காப்பாற்றவும் போராடிக்கொண்டிருக்க, பால் மேக்லியாட் (Paul McLeod) – கிறிஸ்டீயன்(Christeen) என்கிற தனியொரு தம்பதியும் அளவிட முடியாத சேவையைச் செய்துவருகிறார்கள். இருவரும், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள அதே பகுதியில் தங்களின் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.
காட்டுத்தீயில் காயம்பட்டுள்ள கோலாக் கரடிகளைத் தங்கள் வீட்டில் வைத்தே மருத்துவம் பார்த்து வருகின்றனர். இது இவர்களின் 27 வருடத் தொடர் உழைப்பு. இவர்கள் கால்நடை மருத்துவர்களாக இருப்பதோடு, தன்னார்வலர்களாகவும் இச்சேவையைப் புரிந்து வருகின்றனர். இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் கிறிஸ்டீன் கூறும்போது, “இந்த நேரத்தில் கோலாக் கரடிகளுக்கே முன்னுரிமை” என்றார். ஆம் அதற்கு மிகக் கூர்மையான காரணமும் உண்டு. கோலாக் கரடிகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் உயிரினம். தங்கள் நாட்டின் கௌரவமாகக் கருதும் இந்த உயிரினத்தின் எண்ணிக்கை சமீப காலமாகக் குறைந்துகொண்டே வருகிறதாம்.
இப்போது அவருடைய வீட்டில் 24 கோலாக்கள் உள்ளன. காயமடைந்த கரடிகளுடைய தீக்காயங்களுக்கு முதலில் சிகிச்சையளிக்கப்படுகிறது. அதில் சூட்டி(sooty) என்ற ஒரு கரடி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தீயில் வெந்திருந்த சூட்டியின் பாதத்தை மருந்து கொண்டு சுத்தம் செய்து தீக்காயத்திற்கு மருந்திட்டுக் காப்பாற்றினார்கள். ஆனால், உடல் முழுவதும் தீக்காயங்களோடும் அந்தக் காயங்கள் ஏற்படுத்தும் வேதனைகளோடும் கோலாக்கள் படும் பாட்டைத் தம்பதியரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கோலா கரடிகளை நேசத்துடன் பராமரித்துச் சிகிச்சையளிக்கும் தம்பதி, அவற்றைக் குழந்தைகளைப் போல் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். “இந்தப் பணியை முடிக்க மிகவும் நேரம் எடுத்துக்கொள்ளும். சூட்டி! நீ காட்டிலேயே ஏராளமான கொடுமையை அனுபவித்திருப்பாய். உன் வலி ஓரளவாவது குறையும்படி நான் மயக்க மருந்திடுகிறேன்” என்று சூட்டியிடம் பேசிக்கொண்டே மிகவும் மென்மையாக அதன் பாதம், மூக்கு, கன்னங்களில் மயக்க மருந்தைத் தடவியவர், புகைக்கரி படர்ந்துள்ள அதன் ரோமத்தை நீக்கிவிட்டு, உரிந்துவரும் அதிகப்படியான தோலை எடுத்துவிட்டார். அப்படி எடுத்துவிட்டால் மேலும் அந்தக் கோலா கரடிக்குத் தொல்லை இருக்காது. அதன் காயங்களும் விரைவில் குணமாகிவிடும் என்பது தம்பதியரின் கருத்து.
கோலாக்களைப் பொறுத்தவரை நோய்த்தொற்று மிகவும் அபாயகரமானது. தற்போது காட்டுத்தீயால் சுற்றுப்புறமெங்கும் தூசியும் அழுக்கும் படர்ந்துள்ளன. இவை அனைத்தையும் கூடிய விரைவில் சுத்தம் செய்யவேண்டும். மருந்தை நாம் வேண்டிய இடத்தில் பூசிவிட்டால், அதன் பாதங்களை மீண்டும் அவை சேதப்படுத்தாமல் இருக்கக் காலுறைகளை அணிந்துவிடுகிறார்கள். நாடெங்கும் உள்ள மக்கள் ஆயிரக்கணக்கான காலுறைகளைக் காட்டுத்தீப் பரவும் நேரங்களில் கோலா சரணாலயங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால், இப்போது போதுமான அளவுக்குக் கோலாக்களுக்குக் காலுறைகள் உள்ளன.
நெருப்பு பரவும் நேரங்களில் கோலாக்கள், அவற்றின் உள்ளார்ந்த உணர்வுகளால் மரத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டால் தப்பிவிடலாம் என்று அவை எண்ணும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உச்சியில்தான் அனல் தகித்துக்கொண்டிருக்கும். அப்படிச் சிக்கிக்கொள்ளும் கரடிகளை உயரமான ஏணிகளையும் வாளிகளையும் வைத்துத்தான் மீட்க வேண்டும். சில நேரங்களில், உச்சியிலிருந்து கீழே விழும் கரடிகள் கடும் நெருப்புக்கு மத்தியில் மூச்சிறைத்து இறந்தும் விடுகின்றன. இவ்வளவுக்கும் நடுவேதான், இந்தத் தம்பதியர், கோலாக்களை மீட்டுக் கொண்டுவந்து சிகிச்சையளித்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மருந்து கொடுக்கப்பட்ட கோலாக்களுக்கு யூகலிப்டஸ் இலையை உணவாகக் கொடுக்கின்றனர். இவை தங்களுக்குக் தேவையான நீரை யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே எடுத்துக்கொள்கின்றன. வென்டோலின் இன்ஹேலர் மூலமாக மூச்சுப் பிரச்னையையும் நெபுலைசர் (Nebuliser) மூலமாகச் செயற்கை சுவாசத்தையும் கொடுத்து அவற்றுடைய சுவாசத்தைச் சீராக வைத்துக்கொள்வதை உறுதிசெய்கின்றனர்.
அவர்கள் வசிக்கும் ஹில்வில் (Hillville) மற்றும் டினோனி (Tinonee) பகுதிகளில் கோலா கரடிகள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. அவற்றைப் பார்த்துகொள்ள யாராவது வேண்டுமே என்ற எண்ணமும் அந்த யாராவது ஏன் நாமாக இருக்கக்கூடாதென்ற எண்ணமும்தான் இந்தத் தம்பதியரை இந்தச் சேவையில் ஈடுபட வைத்துள்ளது.
அவர்களிடம் இப்போது நிறைய கோலா கரடிகள் உள்ளன. அவற்றுக்கு அந்தத் தம்பதியரின் வீடுதான் காப்பகம். அவை குணமடைந்தபின், அவற்றை மீண்டும் அவற்றுடைய வாழ்விடத்திலேயே விடுவதுதான், உண்மையான வெற்றி என்று நினைக்கின்றனர் அந்தத் தம்பதியர்.
ஆம், மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம், சிகிச்சை முடிந்ததும் வீடு திரும்பித்தானே ஆகவேண்டும். கோலா கரடிகள் குணமடைந்து அவற்றின் சிகிச்சையும் முடிந்துவிடும். ஆனால், அவற்றின் வீடு?